×

அசாமில் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு: தொண்டர்களுடன் அமர்ந்து போராட்டம்

நாகோன்: அசாமின் ஹைபோராகானில் உள்ள ஸ்ரீசங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு செல்வதற்கு ராகுல்காந்திக்கு அதிகாரிகள் அனுமதி தராததால் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த வியாழன்று இந்த யாத்திரை அசாமிற்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களின் வழியாக யாத்திரை நடைபெற்று வருகின்றது. அவரது யாத்திரைக்கு ஏராளமான மக்கள் கூடுவதால் ஆளும் பாஜவினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதையும் மீறி ராகுலின் யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக நாளான நேற்று ராகுல் அசாமில் உள்ள சங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். இதன்படி நேற்று காலை ராகுல்காந்தி, இதர காங்கிரஸ் தலைவர்களுடன் ஹைபோராகானில் உள்ள ஸ்ரீசங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு சென்றார். ஆனால் ராகுல் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கிருந்த போலீசார் ராகுலை கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். கோயிலுக்கு செல்லவிடாமல் தன்னை மட்டும் தடுப்பது ஏன் என்பது குறித்து ராகுல் காந்தி அங்கிருந்த போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ராகுலும் இணைந்து போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக அங்கு சற்று நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கோயிலை சுற்றியும் தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. பிற்பகல் 3மணிக்கு தான் ராகுல் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உள்ளுர் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், எம்எல்ஏ சிபாபோனி போரா ஆகியோர் சங்கர் தேவ் சத்ராவிற்கு சென்று திரும்பி வந்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ‘‘கோயிலுக்குள் யார் செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும் என்பதை தற்போது பிரதமர் மோடி தான் முடிவு செய்வாரா?. நாங்கள் எந்த பிரச்னையையும் உருவாக்க விரும்பவில்லை. கோயிலில் பிரார்த்தனை செய்ய விரும்பினோம். சட்டம் ஒழுங்கு நெருக்கடியின்போது மந்த சங்கர்தேவ் பிறந்த இடத்திற்கு அனைவரும் செல்ல முடியும். ராகுல்காந்தியால் மட்டுமே செல்ல முடியாது. சங்கர்தேவ்வை போல் மக்களை ஒன்றிணைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். வெறுப்பை பரப்பக்கூடாது. அவர் நமக்கு குரு போன்றவர். எனவே தான் இங்கு வந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன்.” என்றார்.

காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவர் லால்ஜீ தேசாய் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஆகியோர் எங்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது மிகவும் வெட்கக்கேடானது. இது அராஜகம். நாட்டில் யார் பிரார்த்தனை செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று பிரதமர் முடிவு செய்வது துரதிஷ்டவசமானது. பிரதமர் ராமர் கோயிலில் பூஜைசெய்து முடிக்கும் வரை நாட்டில் யாரும் எங்கும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றார்.

* நடந்து செல்ல போலீஸ் தடை

அசாமின் மோரிகோன் மாவட்ட காவல்துறை ஆணையர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில்,‘‘ இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பெற்றுள்ள ராகுல்காந்தியின் பாதுகாப்பில் அக்கறை கொண்டும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கும் நோக்கத்திலும் பிஹூடோலியில் நடக்கவுள்ள தெருமுனை கூட்டம் மற்றும் பாத யாத்திரையை ராகுல்காந்தி தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

The post அசாமில் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு: தொண்டர்களுடன் அமர்ந்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Assam ,Nagaon ,Rahul Gandhi ,Congress ,Sri Shankar Dev Chatra temple ,Hyboragan ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...