×

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது

அயோத்தி: அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோயிலின் மூலவர் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2.7 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்கள், தரை தளம் உட்பட 3 தளங்களுடன் ரூ.1,800 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்படும் கோயிலின் தரைதளப் பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், மூலவரான குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்து, கோயிலை முறைப்படி திறந்து வைக்கும் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

இவ்விழாவையொட்டி, ராமர் கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அயோத்தி நகரில் ஒவ்வொரு நூறு மீட்டர் தொலைவுக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள் குவிந்து அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம், சாதுக்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 7,000க்கும் மேற்பட்ட விவிஐபிக்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்ட போதிலும், பாஜ, ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் விழாவை புறக்கணித்தனர். கும்பாபிஷேக விழா காலை 10 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று காலை விமானம் மூலம் டெல்லியிலிருந்து அயோத்தி வந்தடைந்தார். முன்னதாக, பிராண பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 11 நாட்கள் விரதம் இருந்தார். மேலும், ராமர் தொடர்புடைய பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டார். அயோத்தி விமான நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு ராம ஜென்மபூமியை பிரதமர் மோடி வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் 12.29 மணிக்கு சுபமுகூர்த்த நேரத்தில், குழந்தை ராமர் சிலையின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோர் பிராண பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்றனர். 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை செய்தார்.

குழந்தை ராமர் சிலைக்கு மலர் தூவி மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்த பிரதமர் மோடி, மகா ஆரத்தி காட்டி கோயிலை முறைப்படி திறந்து வைத்தார். அப்போது கோயில் வளாகம் முழுவதும் வானில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அங்கு கூடியிருந்த அனைவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு ராமரை வணங்கினர். இந்த பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் மூலமாக மக்கள் நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். இவ்விழாவுக்காக ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் பொதுமக்கள் குழந்தை ராமரை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அத்வானி வரவில்லை
பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் மறைந்த அசோக் சிங்கால் ஆகியோர் ராம ஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்கள். இதில், அத்வானி (வயது 96), முரளி மனோகர் ஜோஷி (90) ஆகியோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க கடந்த மாதம் அழைப்பிதழ் அனுப்பிய ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, அவர்களின் வயது மூப்பு காரணமாக விழாவில் பங்கேற்க வர வேண்டாம் என கேட்டுக் கொண்டது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அத்வானி விழாவில் பங்கேற்பார் என விசுவ இந்து பரிஷத் கூறியது. ஆனால், அத்வானி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

* 11 நாள் விரதத்தை முடித்தார்
ராமர் கோயில் கருவறையில் சென்று பிராண பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்தார். இதில் வெறும் தரையில் படுத்து உறங்கிய அவர் தினமும் பழங்கள் மற்றும் இளநீர் மட்டும் ஆகாரமாக எடுத்துக் கொண்டார். இந்நிலையில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு கோவிந்த் தேவ் கிரி ஜி மகாராஜ் தண்ணீர் கொடுத்து மோடியின் விரதத்தை முடித்து வைத்தார். கோயில் வளாகத்தில் வெள்ளி குடையை ஏந்தி வந்த பிரதமர் மோடி தங்க நிற குர்தாவும், கிரீம் நிற வேட்டியும் என பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார். பூஜைகளை முடித்த அவர் குழந்தை ராமர் சிலைக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். முன்னதாக அவர் தனது டிவிட்டரில், ‘குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அசாதாரண தருணம் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கப் போகிறது. இந்த தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வாழ்க சியா ராம்!’’ என பதிவிட்டிருந்தார்.

* ‘அதிர்ஷ்டசாலி நான்’ சிற்பி அருண் பெருமிதம்
குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் கூறுகையில், ‘‘என்னையும், என் குடும்பத்தையும் ராமர் தான் காப்பாற்றுகிறார். அவர் தான் இந்த பணிக்கு என்னை தேர்வு செய்துள்ளார் என நம்புகிறேன். இந்த பூமியில் என்னை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்’ என்றார். அவரது மனைவி விஜேதா கூறுகையில், ‘‘குழந்தை ராமர் சிலையை செதுக்க, பல இரவுகள் தூங்காமல் யோசித்து கவனம் செலுத்தினார். பல நாள் எங்களுடன் பேசாமல் கூட இருந்துள்ளார். இதற்கெல்லாம் இப்போது பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.

* பாகிஸ்தான் கவலை
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘கடந்த 31 ஆண்டுகால நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்றைய கும்பாபிஷேக விழா, இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக் காட்டுகின்றன. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக இந்திய முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதற்கான தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சமாக இவை அமைகின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவா சித்தாந்தம் மத நல்லிணக்கத்திற்கும், பிராந்திய அமைதிக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் புனித இடங்கள் உட்பட மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொள்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

The post பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது appeared first on Dinakaran.

Tags : Ramar Temple ,Ayodhya ,Modi ,Ramar ,Supreme Court ,Ayothi ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...