×

அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் 24ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: 9,312 காளைகள், 3,669 வீரர்கள் பதிவு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 வீரர்களும் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் 66 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்காக ரூ.22 கோடியில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த அரங்கத்தை நாளை மறுநாள் (ஜன. 24) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அரங்கம் திறப்பு விழா முடிந்ததும், ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக இங்கு நடைபெறுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் முறையில் நடந்து முடிந்துள்ளது.

இதில் பங்கேற்பதற்காக 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர். கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்திட சுற்றுலாத்துறை தரப்பில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியைக் காண ஆர்வமுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பெயர்களை touristofficemadurai@gmail.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

The post அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் 24ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: 9,312 காளைகள், 3,669 வீரர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Artist Climbing Arena ,Alanganallur ,Artist Accession Stadium ,Madurai district ,Dinakaran ,
× RELATED மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா...