×

பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம்: போக்குவரத்துத்துறை அதிரடி

சென்னை: பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1892 பேருந்துகளுக்கு 36,55,414 ரூபாய் அபராதமாக போக்குவரத்து துறை சார்பில் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வன்னம் இருந்ததால் தமிழக முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிறப்பு ஆய்வில் மாநிலம் முழுவதிலும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள். மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகிய அலுவலர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதிலும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்திகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 36,55,414 தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து, அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 1000 ஆம்னி பேருந்துகளை வரைமுறைபடுத்துவதற்கான காலக்கெடு 31.03.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உடனடியாக தொடர்புடைய மாநிலங்களில் இருந்து NOC பெற்று 31.03.2024-க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்துக் கொண்டு பர்மிட் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் உரிய பர்மிட் இன்றி இத்தகைய வாகனங்கள் இயங்கி வருவதால் தமிழ்நாடு மாநில அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த வரன்முறை படுத்தும் நடவடிக்கைக்கு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 01.04.2024 முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் இயங்கி வரும் வரன்முறை படுத்துப்படாத எந்த ஒரு ஆம்னி பேருந்தும் இயக்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

The post பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36 லட்சம் அபராதம்: போக்குவரத்துத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Omni ,Pongal holiday ,Chennai ,Transport Department ,Pongal ,Diwali ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து