புதுடெல்லி: ராமர் கோயில் தொடர்பாக சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட 100 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இதனிடையே சமூக ஒழுங்கை குலைக்கும் வகையில் செயல்படுபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தியது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை தலைவர்கள் மற்றும் ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் ‘சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளை காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் இருந்தால் அதுதொடர்பான தகவல்களை உத்தர பிரதேச அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மத ரீதியாக பிரச்னையுள்ள பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருத்தல் வேண்டும். ராமர் கோயில் தொடர்பான போலி செய்திகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய 100 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
The post ராமர் கோயில் குறித்த சர்ச்சை பதிவு: 100 சமூக வலைதள கணக்கு முடக்கம்.! மாநில அரசுக்கு ஒன்றிய உள்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.