×

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்தனர்: ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தியில் விழாக்கோலம்

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தியில் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய பூஜை மற்றும் சடங்குகள் கடந்த சில நாள்களாகவே அயோத்தி கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நீரை கொண்டு கோயில் கருவறை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அலங்கார விளக்கொளியில் கோயில் ஜொலிக்கிறது. முக்கிய நிகழ்வான மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை இன்று மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. கருவறையில் 300 கோடி ஆண்டு பழமைவாய்ந்த பாறையை வெட்டி குழந்தை ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமரின் கண்கள் மூடப்பட்டுள்ள மஞ்சள் துணி அகற்றும் விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

ராமர் கோயில் திறப்புவிழா இன்று முடிந்த பின்பு நாளை முதல் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல், கட்சி தலைவர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்தனர்: ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தியில் விழாக்கோலம் appeared first on Dinakaran.

Tags : Ramar Temple ,Ayodhya ,Ramar Temple Inauguration Ceremony ,Modi ,Lakhs ,Ramar Temple Opening Ceremony ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...