×

சபரிமலை சீசனில் கன்னியாகுமரிக்கு 15 லட்சம் ஐயப்ப பக்தர்கள் வருகை

 

கன்னியாகுமரி, ஜன.22: சபரிமலை சீசனில் கன்னியாகுமரிக்கு 15 லட்சம் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்துள்ளனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருவோர் காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி தொடங்கியது. சபரிமலைக்கு செல்கின்ற மற்றும் சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள் என்று தினமும் ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கும் வந்து சென்றனர். சபரிமலை சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு தினமும் சராசரியாக 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து உள்ளனர். அந்த வகையில் மொத்தம் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக சுற்றுலா பயணிகளும் சபரிமலை சீசன் காலத்தில் மொத்தம் 5.36 லட்சம் பேர் வந்து சென்று உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. சபரிமலை சீசன் நிறைவடைந்த நிலையிலும், நேற்று வாரவிடுமுறை என்பதால் காலை முதல் வெளிமாநிலம், வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்திருந்தனர். இதனால் வழக்கம்போல் கன்னியாகுமரி கடற்கரை களை கட்டியது.

The post சபரிமலை சீசனில் கன்னியாகுமரிக்கு 15 லட்சம் ஐயப்ப பக்தர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Sabarimala ,Ayyappa ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...