கொலம்பியா: அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி வகிக்கும் திறன் டிரம்புக்கு இருக்கிறதா? என அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். குடியரசு கட்சி சார்பில் நடந்த உள்கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் அதிபர் போட்டியிலிருந்து விவேக் ராமசாமி விலகி விட்டார்.
இந்நிலையில் நியூ ஹாம்ப்ஷையர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டார். அவருடன் தென்கரோலினா ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர், மாகாண லெப்டினன்ட் கவர்னர், அட்டார்னி ஜெனரல், பொருளாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பேரணியில் டிரம்புக்கு ஆதரவாக பங்கேற்றனர். அப்போது பேசிய டிரம்ப், “தென்கரோலினாவின் ஒவ்வொரு அரசியல்வாதியும் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதிபர் தேர்தலில் தென்கரோலினா மக்கள் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகள் வெடித்தன. நாடாளுமன்ற பாதுகாப்பை ஹாலே சரியாக கையாளவில்லை” என்று பேசினார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் பெயருக்கு பதில் நிக்கி ஹாலேவின் பெயரை மாற்றி கூறியது சர்ச்சையையும், விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நிக்கி ஹாலே தன் டிவிட்டர் பதிவில், “டிரம்பின் பேச்சு அவர் குழப்பத்தில் உள்ளதை தௌிவாக காட்டுகிறது. நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தின்போது நான் தலைநகர் வாஷிங்டனிலேயே இல்லை. ஆனால் டிரம்ப் தன் பேச்சில் தொடர்ந்து நிக்கி ஹாலே என்று என் பெயரை கூறினார். கடும் மனஅழுத்தம் தரக்கூடிய அமெரிக்க அதிபராக பதவி வகிக்க தெளிவான மனநிலை, மனஉறுதி வேண்டும். குழப்பத்தில் உள்ள டிரம்புக்கு அதிபராக மீண்டும் பதவி வகிக்கும் திறன் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The post டிரம்புக்கு அதிபராக மீண்டும் பதவி வகிக்கும் திறன் உள்ளதா?: நிக்கி ஹாலே கேள்வி appeared first on Dinakaran.