×

ராகுல் காந்தி யாத்திரையை தடுத்து நிறுத்த பாஜ முயற்சி: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்

பிஸ்வநாத் சரியாலி(அசாம்): இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜவினர் கோஷம் எழுப்பினர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். கடந்த வியாழனன்று யாத்திரை அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அங்கு வந்தது முதல் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை விமர்சித்து வருகிறார். இந்தியாவிலேயே அதிகளவு ஊழலில் அதிகளவு திளைத்த முதல்வர் என பாஜ முதல்வர் ஹிமந்தா தான் என அவர் பேசி வருகிறார். நேற்றுமுன்தினம் வடக்கு லக்கிம்பூரில் ராகுலின் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர்கள், பேனர்களை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். மேலும் அதில் பங்கேற்றவர்கள் வந்த வாகனங்களை அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிஸ்வநாத் சரியாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி நேற்று பேசுகையில்,‘‘ இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடாது என அசாம் அரசு மிரட்டி வருகிறது. ஒற்றுமை யாத்திரையின் போது குறிப்பிட்ட வழிகளில் செல்வதற்கு அரசு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், மக்களை மிரட்டி அவர்களை அடக்கி விடலாம் என நினைக்கின்றனர். இது ராகுல் காந்தியின் யாத்திரை அல்ல, மக்களின் குரலாய் ஒலிக்கும் யாத்திரை என்பது அவர்களுக்கு புரியவில்லை. அசாம் முதல்வரும் அவரது குடும்பத்தினரும் அதிகளவு ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு குடும்பத்துக்காகவே மாநில அரசு செயல்படுகிறது’’ என்றார்.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் நீதி யாத்திரை நேற்று நாகோன் வந்தது. அவர் வந்த பஸ்சை சுற்றி வளைத்த பாஜ தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என கோஷமிட்டனர்.கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமை யாத்திரைக்கு எதிராகவும் கூச்சலிட்டனர். அவர்களை தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவை பாஜவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி உடனே பஸ்சில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். பின்னர் பஸ்சில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜவினரை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து ராகுல் டிவிட்டரில் பதிவிடுகையில், அன்பிற்கான கடை எப்போதும் எவருக்கும் திறந்து இருக்கும். ஒன்று பட்ட பாரதம்,வெல்லும் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.பாஜவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவில்,தன்னுடைய கண் முன்னே ஜெய் ஸ்ரீ ராம், மோடி வாழ்க என சிலர் கோஷமிட்டதால் ராகுல் கோபமடைந்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி விரட்டும் முயற்சியில் அவர்களை நோக்கி ஓடினார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இனி வரும் காலங்களில் அவர் எப்படி மக்களை சந்திக்க போகிறார் என கேள்வி கேட்டுள்ளார்.

* சங்கர்தேவா பிறந்த இடத்துக்கு ராகுல் செல்லக்கூடாது:ஹிமந்தா

அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான மந்தா சங்கர்தேவா பிறந்த ஊரான பட்டதிரவா என்ற இடத்துக்கு இன்று ராகுல் காந்தி விஜயம் செய்வார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறக்கப்படும் தினத்தில் சங்கர் தேவா பிறந்த ஊருக்கு ராகுல் காந்தி விஜயம் செய்தால், அசாம் மாநிலத்துக்கு தவறான பெயர் ஏற்படும். எனவே ராகுல் இன்று அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 22ம் தேதிக்கு பின்னர் அவர் அந்த இடத்துக்கு செல்லலாம் என ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.
* ஜெய்ராம் ரமேஷ் கார் மீது தாக்குதல்

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அசாமில் உள்ள பிஸ்வநாத்தில் இருந்து சோனித்பூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். ஜமுகுரி காட் என்ற இடத்தில் வந்த போது சிலர் அவரது காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களும் தாக்கப்பட்டனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

The post ராகுல் காந்தி யாத்திரையை தடுத்து நிறுத்த பாஜ முயற்சி: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,Biswanath Sariyali ,Assam ,India Unity Justice Yatra ,Congress ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு...