×
Saravana Stores

மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை அடைப்பு: மாசி மாத பூஜைக்காக பிப்.13ம்தேதி திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கின. அப்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது. மண்டல காலம் அன்றுடன் நிறைவடைந்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் 2 நாள் இடைவெளிக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் கடந்த 15ம்தேதி நடைபெற்றது. கடந்த 18ம் தேதி வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர். 19ம்தேதி மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணியளவில் திருவாபரணம் அடங்கிய பேழைகள் பந்தளத்திற்கு புறப்பட்டது. இதையடுத்து காலை 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதி சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி 18ம்படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு சென்றார். இதன்பின் நெய் தேங்காய் எரிக்கப்படும் ஆழியில் எரியும் தீ அணைக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் மண்டல பூஜை காலங்களில் நிற்க கூட இடமில்லாமல் இருந்த சபரிமலை சன்னிதானம் வெறிச்சோடி காணப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படும்.

The post மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை அடைப்பு: மாசி மாத பூஜைக்காக பிப்.13ம்தேதி திறக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Mandal Period Completion Sabarimala Temple Walk Closure ,Masi Month Puja ,Thiruvananthapuram ,Sabarimala ,Ayyappan ,Temple ,Masi Month Pooja ,
× RELATED திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு