×

மீண்டும் வதந்தி கிளப்பிய அண்ணாமலை: டிஜிபி அலுவலகம் மறுப்பு

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு தடை விதித்து இருப்பதாக நாளிதழ் ஒன்று பொய் செய்தி வெளியிட்டது. ஆனால் தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இந்த பொய் செய்தியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜவினர் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் எப்போதும் வதந்தியை பரப்பும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, இப்போதும் ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார். ராமர் கோயில் கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவிடக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, காவல் கண்காணிப்பாளர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது போன்று ‘ஸ்கிரீன்ஷாட்’ தயாரித்து வெளியிட்டுள்ளார். கும்பாபிஷேக விழாவை கோயில்கள், பொது இடங்கள், தனியார் இடங்களில் நேரலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

திருமண மண்டபங்களை கண்காணிக்கவும், சிறப்பு நிகழ்ச்சிகளை செயலிழக்க செய்யவும், கும்பாபிஷேக விழாவுக்கு ஆதரவு மற்றும் எதிராக நடக்கும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் உள்ளது. இது போலி என்றால் அதை நிரூபிக்கலாம். என் மீது வழக்கும் தொடரலாம் என அண்ணாமலை சவடால் அடித்துள்ளார். ஆனால் கோயில்களில் எப்படி சிறப்பு ஏற்பாடுகளுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லையோ, அதேபோல காவல்துறை தரப்பில் இருந்து அண்ணாமலை கூறுவது போன்ற உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என டிஜிபி அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அண்ணாமலை ஸ்கிரீன் ஷாட் போல டைப் செய்து, போலியான ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி இதை உத்தரவிட்டிருக்கிறார் என்பதைப் போல பதிவு செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் ஆதாரப்பூர்வமாக எதையும் நிரூபிக்கவில்லை. காவல்துறை வாட்ஸ்அப் குரூப்களில் இருந்தால் அதை சொல்லி வெளியிட்டிருக்கலாம். ஆனால் எங்குமே அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், ஸ்கிரீன்ஷாட் போல சொந்தமாக டைப் செய்து தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஸ்கிரீன்ஷாட் வேலையை டிஜிபி அலுவலகம் மறுத்துள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பாஜ உண்மையான பக்தியோடு செய்யவில்லை அரசியல் லாபத்திற்காக செய்வதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. திமுகவும் இதே விமர்சனத்தை வைத்தாலும், திமுக தலைமையில் செயல்படும் அரசு, அனைத்து மக்களுக்குமான அரசாகவே செயல்படுகிறது.

மக்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டது இல்லை. ஆனால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதப்பிரச்னைகளை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பாஜவினர் செயல்படுகின்றனர். அதற்கு ஒரு படி மேலாக பாஜ தலைவர் அண்ணாமலை எப்போதும் போல இல்லாத ஒன்றை கூறி குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மீண்டும் வதந்தி கிளப்பிய அண்ணாமலை: டிஜிபி அலுவலகம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : DGB ,Chennai ,Ramar Temple Kumbapisheka ceremony ,Ayodhya ,Tamil Nadu ,
× RELATED டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி...