×

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: கொடுங்கையூரில் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். கொடுங்கையூர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சிலர் வாங்கி, வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட போலீசார் எருக்கஞ்சேரி, கொடுங்கையூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டின் மதில்சுவர் அருகே சந்தேகப்படும்படி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அவை தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்தபோது, அதில் இருந்தது ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த இடத்தில் இருந்து 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்த கொடுங்கையூர், எருக்கஞ்சேரி திருப்பூர் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ரேஷன் அரிசியை அப்பகுதி பொதுமக்களிடமிருந்து வாங்கி அதனை கூடுதல் விலைக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chennai ,Kodunkaiyur ,Erukkancheri ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...