×

நாளை ராமர் கோயில் திறப்பு; விடுமுறை அறிவித்துவிட்டு பல்டி அடித்த டெல்லி எய்ம்ஸ்: பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டுபாடுகள்

புதுடெல்லி: நாளை ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் விடுமுறை அறிவித்த நிலையில், கண்டனங்கள் எழுந்ததால் அறிவிப்பை வாபஸ் பெற்றது. அயோத்தியில் நாளை ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறுவதால் பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையும் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் செயல்பட்டன. பெரும்பாலான வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளன. ஒன்றிய அரசு அலுவலங்கள் அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை உட்பட மற்ற அரசு மருத்துவமனைகளில் நாளை மதியம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவசர அறுவை சிகிச்சைகள் பிரிவுகள் தவிர மற்ற பிரிவுகள் செயல்படாது என்று கூறப்பட்டது. மருத்துவமனைகளின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

அதனால், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை எய்ம்ஸ் வாபஸ் பெற்றது. அதனால் மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும் என்று மறு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அசாம் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அயோதியில் ராமர் கோயில் திறப்பு விழா நடப்பது பாரதிய நாகரிகத்தின் வெற்றியாகும். பிரதமர் மோடிக்கு அசாம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் நாளை மாலை 4 மணி வரை இறைச்சி, மீன் கடைகள், சந்தைகள் மூடப்படும் மற்றும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

The post நாளை ராமர் கோயில் திறப்பு; விடுமுறை அறிவித்துவிட்டு பல்டி அடித்த டெல்லி எய்ம்ஸ்: பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டுபாடுகள் appeared first on Dinakaran.

Tags : Ramar ,Temple ,Delhi Aims ,BJP ,New Delhi ,Ramar Temple ,Ayodhya ,Baldi ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...