×

பீகாரை போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: பீகாரில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தி உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை 50லிருந்து 65 சதவீதமாக உயர்த்திய நிதிஷ்குமார் அரசு, அடுத்தக்கட்டமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. பீகாரை போன்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிலும் நடத்த வேண்டும்.

கர்நாடகத்துக்கு முன்பே இங்கு நடத்தப்பட்டிருந்தால், அதில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை 69ல் இருந்து 90 ஆக உயர்த்தியிருக்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித் தந்திருக்கலாம். இனியாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். வரும் 23ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு:

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் ஒன்றிய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன் ? தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

The post பீகாரை போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,TTV.Thinakaran. ,CHENNAI ,TTV.Thinakaran ,Tamil Nadu ,Bihar ,PAMC ,Ramadas ,Nitish Kumar ,TTV.Dinakaran ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...