×

அசாம் மாநிலத்தில் பதற்றம் ராகுல் யாத்திரை வாகனங்கள் உடைப்பு; பேனர் கிழிப்பு: பா.ஜ மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

லக்கிம்பூர்: அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. மேலும் சாலையில் ராகுலை வரவேற்று வைத்திருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தவுபாலில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை வியாழனன்று அசாம் மாநிலத்தில் நுழைந்தது. அங்கு 25ம் தேதி வரை யாத்திரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வடக்கு லக்கீம்பூர் நகரில் ராகுல் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ராகுல் யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் அடித்துஉடைக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா கூறியதாவது: ராகுல் யாத்திரையை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் போர்டுகள் மற்றும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. பேனர்கள் வைக்கச் சென்ற கட்சியினர் தாக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசில் நாங்கள் 2 புகார்களை பதிவு செய்துள்ளோம் ’ என்றார். இந்த தாக்குதலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டித்துள்ளார். அவர் கூறுகையில்,’ ராகுல்யாத்திரை வாகனங்கள் மீது வெட்கக்கேடான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அசாம் பா.ஜ அரசின் மிரட்டல் தந்திரங்களை கண்டு காங்கிரஸ் கட்சி பயந்து விடாது’ என்று தெரிவித்துள்ளார்.

* சங்கரதேவா பிறந்த இடத்தில் ஜன.22ல் ராகுல் வழிபாடு
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ம் தேதி அசாம் மாநிலம் நாகோவான் மாவட்டத்தில் உள்ள வைணவ அறிஞர் சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவாவில் ராகுல் காந்தி வழிபாடு நடத்துகிறார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

* சாதி,மதம், மொழியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துகிறது பா.ஜ
அருணாச்சலப்பிரதேசத்தில் யாத்திரை நுழைந்த உடன் அங்குள்ள டோய்முக் நகரில் ராகுல் காந்தி கூறுகையில்,’ நாட்டை சாதி, மதம், மொழியின் பெயரால் பா.ஜ பிளவுபடுத்துகிறது. தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காகத்தான் பா.ஜ பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல’ என்றார்.

* ராகுல் யாத்திரையை மோடி விரும்பவில்லை
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது; ராகுல் யாத்திரைக்கு வகுப்புவாத வண்ணம் கொடுக்க முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முயற்சிக்கிறார். பிரதமர் மோடி சொல்வதை கேட்டு இதை அவர் செய்கிறார். ராகுல் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதையும், வரவேற்பு பெருகுவதையும் பிரதமர் விரும்பவில்லை. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா யார்? அவர் ஒரு பொம்மை. இவ்வாறு தெரிவித்தார்.

* அடுத்தவாரம் 2 நாள் யாத்திரை நிறுத்தம்
ராகுல் காந்தி யாத்திரை ஜனவரி 25 பிற்பகல் மேற்கு வங்கத்தில் நுழையும். அலிபுர்துவாரில் இரவு தங்குவார்கள். அதன்பிறகு 2 நாட்கள் யாத்திரை நிறுத்தப்படும். ஜனவரி 28 அன்று யாத்திரை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* அவதூறு வழக்கில் தாமதம் ராகுலுக்கு ரூ.500 அபராதம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான ராகுல்காந்தி கடந்த 2014ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி அருகே மார்ச் 6ம் தேதி நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் கொன்றுவிட்டதாக கூறியதாக தானே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகின்றது. இந்த வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக ராகுலுக்கு நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

The post அசாம் மாநிலத்தில் பதற்றம் ராகுல் யாத்திரை வாகனங்கள் உடைப்பு; பேனர் கிழிப்பு: பா.ஜ மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Assam ,Rahul Yatra ,Congress ,BJP ,Lakhimpur ,Rahul Gandhi ,Rahul ,Former ,President ,Manipur ,Daupal ,Dinakaran ,
× RELATED அசாமில் மாபியா ஆட்சி நடக்கிறது: பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு