×

போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவதற்கான தொகையில் வருமான வரி பிடித்தம் செய்ய தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டுத் தொகை அரசுக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டதால் அதிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அதை அரசுடமையாக்கி 2020 ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.69 கோடியை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.36 கோடியே 87 லட்சத்தை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க கோரி ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேதா நிலையத்தை கையகப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அரசு தரப்பில் வைப்பீடாக செலுத்தப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து 70 கோடியே 40 லட்சம் ரூபாய் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு பிளீடர் பி.முத்துகுமார் தெரிவித்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகையில் வருமான வரி பாக்கியை வசூலிக்க தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவதற்கான தொகையில் வருமான வரி பிடித்தம் செய்ய தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Boise Garden ,CHENNAI ,Madras High Court ,Jayalalithaa ,Veda Station ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...