×

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடிதம்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்) கூட்டமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதம்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் என அனைத்து அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறோம். 2003ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். 2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்திலும் கூறி, எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்.

அவர் மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி எங்கள் கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. தற்போது தமிழகத்தின் நிதிநிலை சரியாகும் வரை கொஞ்சகாலம் பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு முடியும் தருவாயில் தற்போது போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 22ம் தேதி (நாளை) முதல் 24ம் தேதி வரை 3 நாள் மாநிலம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்படும். 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும். 10ம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். 16ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Jacto Geo Federation ,CHENNAI ,Jacto Jio ,Teachers, Government Servants ,Federation ,Chief Minister ,Jacto-Jio ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...