×

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த நாளிலேயே காயத்ரியை அதிமுகவில் சேர்த்ததால் ஆத்திரம்: பாஜவை சீண்டி பார்ப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்த அதே நாளில் காயத்ரி ரகுராமை அதிமுகவில் சேர்த்ததால் எடப்பாடி மீது பாஜக நிர்வாகிகள் கோபம் அடைந்துள்ளனர். இனியும், எடப்பாடி அணியினர் மீது பாஜ மேலிடம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்க கூடாது என்று கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவும், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு ஆன்மிக பயணம் செல்லவும் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார். சென்னையில், நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதேநேரம், சென்னை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவரது கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களோ விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை.

அதேநேரம், பாஜகவை அவமானப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தமிழகம் வந்த அதே நாளில் தமிழக பாஜ கட்சியில் இருந்து மாநில தலைவர் அண்ணாமலையால் வெளியேற்றப்பட்ட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்து, அதிமுகவில் இணைந்தார். எடப்பாடி அனுமதியுடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக பாஜ தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நபரை, பிரதமர் மோடி தமிழகம் வந்த அதே நாளில் எடப்பாடி பழனிசாமி எப்படி அதிமுகவில் சேர்க்கலாம் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இதுபற்றி தமிழக பாஜ நிர்வாகிகள் கூறும்போது, காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கும்போது மாநில தலைவர் அண்ணாமலைக்கு அடுத்த 2ம் கட்ட தலைவர்கள் பட்டியலில் இருந்தார். வெளிநாடு மற்றும் பிறமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள பாஜ தலைவர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

அப்படிப்பட்ட ஒருவரை அதிமுகவில் தற்போது சேர்க்க வேண்டிய காரணம் என்ன? காயத்ரி பாஜகவில் இருந்து வெளியேறி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஒரு ஆண்டில் தேவைப்பட்டால் எப்போதோ அவரை அதிமுகவில் எடப்பாடி சேர்த்திருக்கலாம். தற்போது பிரதமர் மோடி வரும் நாளில், பாஜ தலைவர்களை சீண்டிப்பார்க்கும் நோக்கத்தில் அதிமுக தலைமை செயல்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. டெல்லி பாஜ தலைமை மற்றும் முக்கிய தலைவர்கள் இனியும் தமிழகத்தில் அதிமுக மீது மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் இருக்கும்போது கட்சி தலைமை மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த 4 வருடத்தில் அவர் மீதும், அமைச்சர்கள் மற்றும் பினாமிகளான தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இதில் பல முறைகேடுகளை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனாலும், பாஜ கட்சி மேலிடம் எடப்பாடி மற்றும் அவரது சகாக்கள் மீது நடவடிக்ைக எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தது. காரணம், அதிமுக – பாஜ தமிழகத்தில் கூட்டணியில் இருந்தது. தற்போது அதிமுக தலைவர்கள் பாஜ கூட்டணியை முறித்துக் கொண்டு விட்டனர். மேலும், பிரதமர் மோடியையே அவமானப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் உள்ளது. அதனால் இனியும் அதிமுக தலைவர்கள் மீது கட்சி மேலிடம் மென்மையான போக்கை கடைபிடிக்காமல், அவர்கள் செய்த ஊழல் மற்றும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். அதேநேரம், தமிழகத்தில் பாஜகவின் பலம் என்ன என்பதை அதிமுகவுக்கு காட்ட வேண்டும் என்று பாஜ மேலிட தலைவர்களிடம் தமிழக பாஜ நிர்வாகிகள் புகார் அளித்துள்ளோம் என்றனர்.

The post பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த நாளிலேயே காயத்ரியை அதிமுகவில் சேர்த்ததால் ஆத்திரம்: பாஜவை சீண்டி பார்ப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Gayathri ,AIADMK ,Modi ,Tamil Nadu ,BJP ,CHENNAI ,Edappadi ,Gayatri Raghuram ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...