×

ரூ.634.99 கோடியில் 1,666 புதிய அரசுப்பேருந்துகள் கொள்முதல் முதற்கட்டமாக 100 பேருந்துகள் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தி தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, சாதாரண நகர பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக விடியல் பயணம் திட்டம், மக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், 2023-24க்கான நிதிநிலை அறிக்கையிலும், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும் ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1666 பிஎஸ் 6 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக, 100 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5, மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக சீர்கெட்டிருந்த போக்குவரத்து துறையை முதல்வர் மறுசீரமைத்து உயிர்ப்போடு செயல்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் புதிய பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை கடந்த ஆட்சி காலத்தில் சரியான நேரத்தில் பேசி முடிக்கப்படாத நிலையில், தற்போது முதல்வரால் சரியான காலத்தில் பேசி முடிக்கப்பட்டு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, 5% சம்பளம் வழங்கப்பட்டது. தீபாவளி போனஸ் கலைஞர் ஆட்சியில் 20 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஆட்சியில் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதை முதல்வர் மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தினார். போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம், இந்தியாவில் உள்ள போக்குவரத்து கழகங்களில் முதல்வர் தலைமையில் சிறப்பாக செயல்படுவதை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த ஆண்டு அடித்தட்டம் சிறப்பாக உள்ள பேருந்துகளை புதுப்பிக்கவும், 1500 பேருந்துகளுக்கு நிதி வழங்கி இதுவரை 732 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் 2000 புதிய பேருந்துகளை வாங்க நிதி வழங்கி அதில் முதல்கட்டமாக 1,666 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 100 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மற்ற பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 2000 பேருந்துகள் அடுத்தகட்டமாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தொடங்கியுள்ளது. புதிய ஓட்டுநர், நடத்துனர்களை பணிக்கு எடுப்பதற்கான ஆணை வழங்கப்பட்டு, எழுத்துத் தேர்வு முடிந்து தற்போது நேர்முக தேர்வு நடந்து அவர்களும் பணிக்கு வரும் சூழலில் இந்த துறை முழுவீச்சில் முதல்வர் தலைமையில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொருளாளர் நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்லவன் சாலையில் ஒருபுறம் தொமுச நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கூடி முதல்வருக்கு உற்சாகமாக வரவேற்றனர்.

The post ரூ.634.99 கோடியில் 1,666 புதிய அரசுப்பேருந்துகள் கொள்முதல் முதற்கட்டமாக 100 பேருந்துகள் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu Government Transport Corporations ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...