×
Saravana Stores

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி உச்ச கட்ட பாதுகாப்பு

லக்னோ: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், விழாவை முன்னிட்டு, அயோத்தி நுழைவு வாயில், ராமர் கோயில் மற்றும் பல முக்கிய இடங்களில் பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ள பல முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வர இருப்பதால் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விழாவையொட்டி சைபர் கிரைம் குற்றவாளிகள், ராமர் கோவில் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்க போலி க்யூஆர் அனுப்பியும், பொதுமக்களுக்கு இலவச பிரசாதம் வினியோகம் என்ற பெயரில் மோசடி செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ராமர் கோவிலுக்குச் செல்ல விஐபி அனுமதிச் சீட்டு மற்றும் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்குவதுடன், ராமர் கோவில் என்ற பெயரில் போலி இணையதளத்தையும் உருவாக்கி பணமோசடி செய்து வருகின்றனர். இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அயோத்தி போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி உச்ச கட்ட பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbabhishek ,Ramar ,Ayothi ,Lucknow ,Kumba ,Abisheka ,Ramar Temple ,Uttar Pradesh ,Ayothia ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா