×

ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 2014 மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்கு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை தன்னை மையப்படுத்தி நிகழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனைப்பு காட்டுகிறார். சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும், அதேநேரத்தில் ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது. தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியினுடைய ஆன்மிக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள்.

தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த மக்களவை உறுப்பினர்கள் ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வெள்ள பகுதிகளை பார்வையிட்ட நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் தர முடியாது என்று ஆணவத்தோடு பேசியதை அனைவரும் அறிவார்கள்.எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறார்கள். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி!” இவ்வாறு கூறியிருக்கிறார்.

The post ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் பிரதமர் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ்நாடு மக்கள் சிக்கமாட்டார்கள் : கே.எஸ்.அழகிரி சாடல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,K. S. ,Chennai ,Congress ,President ,K. S. Alaagiri ,PM ,K. S. Akhgiri ,
× RELATED திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பு...