×

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலிருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இன்றும் நாளையும் 2 தினங்கள் ராமேஸ்வரம், அரிச்சல் முனை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

இன்று மதியம் 2 மணிக்கு பிரதமர் ராமேஸ்வரம் செல்லவுள்ளதை அடுத்து டிஜிபி தலைமையில் 3500 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரக்கூடிய இடங்களில் பாரிகார்டுகளை வைத்து பலத்த சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில பகுதிகளில் பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்றும் நாளையும் முற்றிலுமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் வடமாநிலங்களிலிருந்து வரக்கூடிய சுற்றுலா வாகனங்களும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சாமி தரிசனம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் வாசலிலே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram ,Narendra Modi ,Tamil Nadu ,Rameswaram temple ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை