×

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை மெட்ரோ ரயில் திட்டம்

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பலவித காரணங்களுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வந்து குடியேறுகின்றனர். கோவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகள், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகள் செல்கின்றன.

கோவையில் பொதுப்பயன்பாடு மற்றும் தனிப் பயன்பாடு வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில சாலைகளை தவிர்த்து, பெரும்பாலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ளதைப்போல கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுநல அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்னர், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான கோரிக்கை தீவிரமடைந்தது. கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய ஆறு முக்கிய பிரதான சாலைகள் உள்ளன.

இந்த வழித்தடங்களை மையப்படுத்தி மெட்ரோ ரயில் திட்டம் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழக அரசு சார்பில், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசு நிர்வாகத்திடம் அனுமதிக்காக இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது வரை இந்த திட்ட அறிக்கை அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவை சேரன் மாநகரை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, மெட்ரோ ரயில் திட்டப்பணியின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அரசிடம் சில விவரங்கள் கேட்டிருந்தார். இதுதொடர்பாக பாலசுப்பிரமணியம் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துவிட்டாரா?, இத்திட்டம் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதிக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டதா?, இத்திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு, கடன் வழங்கும் உலக வங்கிகளின் விவரம், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான இடவசதி நிலவரம், மெட்ரோ ரயில் பணி எப்போது தொடங்கப்படும், நிலம் கையகப்படுத்தும் பணி எப்போது தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தேன். இதற்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 14.07.2023 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்து, ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்ட அறிக்கையின் ஒப்புதலுக்கு பிறகு நிதி விவகாரங்கள் முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை 6 மாதங்களுக்கு மேலாக ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது தெரியவருகிறது.

தற்போதைய சூழலில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணி அவசியம். கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை மெட்ரோ ரயில் குறைக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தை முன்னரே தொடங்கியிருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தினர் தாமதப்படுத்தாமல், மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை விரைவுபடுத்தி தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

The post தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Coimbatore ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...