×

காங்கயம் இன பூச்சி காளைகள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்: மீண்டும் பழமை திரும்புகிறது

காங்கயம்: காங்கயம் இன பூச்சி காளைகளை வளர்ப்பதில் விவசாயிகள் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் தை பொங்கல் திருநாளில் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு உலக அளவில் புகழ்பெற்றது. இந்த ஜல்லிகட்டில் ஏராளமான காளைகள் போட்டியில் கலந்து கொண்டாலும் காங்கயம் காளைகளே சூப்பர் ஸ்டாராக களத்தில் வீரர்களை பந்தாடின. காங்கயம் காளைகளை அடக்குவதையே மாடு பிடி வீரர்கள் பெருமையாக கருதுகின்றனர். காங்கயம் இன காளைகள் உலக புகழ் பெற்றது முரட்டு குணம் கொண்டது. இதன் கொம்புகள் அழகாக கூர்மையாக இருக்கும். உடலின் முகம் பின் பகுதி கரிய நிறத்திலும், காளையின் வாயிற்று பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். உடல் ஆஜானு பாகுவாக இருக்கும் காளையை பார்க்கும்போதே மிரட்சி ஏற்படும். காங்கயம் காளைகள் வரட்சியான காலத்திலும் மிக குறைந்த உணவை சாப்பிடு அதிக நேரம் சோர்வு இல்லாமல் உழைக்கக்கூடியது. இதன் பெருமையை உணர்துவிதமாக உள்ளது. முரட்டு தனம் மூர்க்க குணம் கொண்ட இந்த காளையை மேலும் பயிற்சி மூலம் யாரும் எளிதில் நெருங்க முடியாத வகையில் மாற்றும்போது மாடு பிடி வீரர்கள் இந்த காளையை நெருங்கி பிடிக்க அதிகம் யோசிப்பார்கள்.

காங்கயம் காளைகளை வாங்கி சென்று ஜல்லிகட்டில் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்தலில் நாம் பாரம்பரிய கிராமங்களை அதன் அடையாளமான மாடுகளை மறந்து விட்டோம். டிராக்டர் வரவு என இயந்திரங்களை பயன்படுத்தி வருவதால் மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. முன்பு ஒரு விவசாயியின் குடும்பத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்கள் விவசாயத்தைக் கவனித்துவந்தார்கள். ஒரு வீட்டில் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் குப்பைத் தொட்டியில் போட்டு மக்கிய உரம், அந்த வருடத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கிடைக்கும். வயல்வெளிகளைச் சுற்றி நிறையப் புயல், மலைகளைத் தாங்கும் நட்டு மரங்கள் இருக்கும். அம்மரங்களின் தழைகள் நெல் பயிரிடப்படும் சேற்றில் மிதித்து நெல் நடவு செய்வார்கள். இந்த நிலையைத் தற்போதைய விவசாய வல்லுநர்கள் இயற்கை விவசாயம் என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட் டத்திற்கு பின், மக்களிடையே மாடுகள் வளர்ப்பதற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. படித்து விட்டு, ஐடி துறையில் வேலையில் இருந்தாலும். காங்கயம் இன மாடுகள் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தனர். மேலும் தற்போது கொங்கு மண்டல பகுதியில் அனைத்து சமூக மக்களிடையே பொண்ணுக்கு திருமான சீராக கொடுக்கப்படும் சீர் வரிசைகளில் காங்கயம் பசு மாடு முதன்மை இடத்தில் உள்ளது. திருமண வீட்டு விஷேசத்தில் மாடுகளை காட்சி படுத்தி வருகின்றனர். மேலும் தம்பதிகள் திருமணம் முடிந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அவர்களது வீடுகளுக்கு செல்வது நடைமுறைக்கு வரத்து வங்கியுள்ளது. மேலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் பலர் நாட்டு மாடு, நாட்டு கோழி ஆகியவற்றை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதை காண முடிகிறது. இதற்காக தங்கள் உண்டியல் சேமிப்பை மாட்டு கன்றுகள் வாங்க பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வளர்க்கும் சிறிய விவசாயிகள் பலர் நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து விபூதி தயாரிப்பது, ஹோமயத்தில் இருந்து பஞ்ச காவியம் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதால் இயற்கை விவசாயம் அதிகரித்து வருகிறது. நாட்டு மாட்டு பால் ஒரு லிட்டர் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையால் தற்போது வீட்டுகள் தோறும் ஒரு நாட்டு மாடு வளர்க்க துவங்கியுள்ளார்கள்.

மேற்கு மாவட்டங்களில் இன விருத்திக்காக வளர்க்கப்படும் காளைகளை பூச்சி காளையென்றும் பொலிக்காளையென்றும் சொல்வர். ஆண் மாடுகளில் கால், வால், திமில், கொம்பு, வயிறு, நிறம், சுழி போன்ற உடலமைப்பின் பல்வேறு காரணிகளை வைத்து பூச்சிக்காளைகள் தேர்வு செய்யப்படும். மற்றவை ஆண் தன்மை நீக்கப்பட்டு எருதுகளாக மாற்றப்படும். இவை தான் பாரம் இழுத்தல், உழவு பணிகள், சவாரி வண்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. பழைய மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாய நிலங்கள் மேட்டாங்காடுகள், கொறங்காடுகளாக இருந்தவை. இவற்றில் வளரும் கொழுக்கட்டை புல், அருகம் புல், ஊசிப்புல், கோரை, பால் பயிறு, நவப்பூடு, காட்டு நறுக்கத்தான் பயிறு, பூனை புடுகு, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு மிகவும் உகந்தது. அதேபோல் மானவாரியாக பயிரிடப்படும் சோளம், தட்டை, நரிப்பயிறு, கொள்ளு, கம்பு,திணை போன்றவை பயிரிடப்பட்டு கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும். நாடு விடுதலைக்கு பின் மேற்கு மண்டலத்தில் பல்வேறு பாசன திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறின. மேய்ச்சல் நிலங்கள் சுருங்கியதால் ஏற்பட்ட தீவன தட்டுப்பாடும் நாட்டின மாடுகளின் எண்ணிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. பூச்சிகாளைகள் தென்மாவட்டங்களில் கோவில் காளைகள் என அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் இந்த காளைகளை யாரோ ஒருவர் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று பராமரித்து கிராமத்தில் உள்ள மாடுகளின் இன விருத்திக்கு அவற்றை பயன்படுத்துவர். இந்த நிலையில் காங்கயத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த பூச்சி காளைகளை பெருமளவில் விவசாய வளர்த்து வருகின்றனர்.

The post காங்கயம் இன பூச்சி காளைகள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்: மீண்டும் பழமை திரும்புகிறது appeared first on Dinakaran.

Tags : Alanganallur ,Tamil Nadu ,Palamedu Jallikatu ,Pongal Thirunal ,
× RELATED அலங்காநல்லூர் குலுங்கப்போகுது: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு