×

நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா`நெல்லுக்கு வேலியிட்ட வைபவம்’ கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ‘திருநெல்வேலி’ எனப் பெயர்வரக் காரணமாக அமைந்த நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. 4ம் நாள் திருவிழாவான நேற்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் நண்பகலில் கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து மண்டகப்படி மண்டபத்தில் வேத பட்டர், சுவாமிக்கு நிவேத்யம் செய்வதற்காக பக்தர்களிடம் நெல் யாசகம் பெறுவதும், பின்னர் கோயில் மண்டபத்தில் நெல் மணிகளை உலர வைத்துவிட்டு வேதபட்டர், கோயில் பொற்றாமரை குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென மழை பொழியும் காட்சியும், நெல் மணிகள் மழையில் இருந்து காக்கும் பொருட்டு வேதபட்டர், கோயில் மண்டபத்திற்கு விரைந்து செல்லும் காட்சியும் பக்தர்கள் முன்னிலையில் அரங்கேறியது. அப்போது கோயில் மண்டபத்தில் நெல் மணிகளை சுற்றிலும் மழை ெபாழிந்த நிலையில் நெல் மணிகளை இறைவன் நெல்லையப்பர் வேலியிட்டு காத்த புராண நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. இதனை வேதபட்டர், நேரில் கண்டு இறைவனின் கருணையை பாண்டிய மன்னரிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து பாண்டிய மன்னரும், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து நெல்லுக்கு வேலியிட்டு காத்த சுவாமி நெல்லையப்பரின் அற்புதத்தை கண்டுகளிக்கிறார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் இணைந்து வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் ரதவீதி வலம் வருதல் நடக்கிறது. தொடர்ந்து வரும் 25ம்தேதி தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி தேவி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகியோர் நண்பகல் 12 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக கைலாசபுரம் தைப்பூச மண்டபம் வந்தடைகின்றனர். தொடர்ந்து தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரியும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் வரும் 27ம்தேதி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள சந்திரபுஷ்கரணி என்கிற வெளிதெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா இரவு 7 மணிக்கு நடக்கிறது.

The post நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா`நெல்லுக்கு வேலியிட்ட வைபவம்’ கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nellaiappar Temple Thaipusa Festival `Velyiita Vaibhavam for Rice ,Nellai ,Thiruvilayadal ,Nellaiappar temple ,Thaipusa festival ,Tirunelveli ,Thaipusa ,Nellaiappar temple Thaipusa festival `Vaipavam fenced with rice' festival ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...