×

இயல்பை விட 413 சதவீதம் அதிகம் கொட்டி தீர்த்தது நெல்லையில் டிசம்பரில் சராசரியாக 572 மிமீ மழை: வறண்ட குளங்களே இல்லாத நிலை உருவானது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ெகாட்டித் தீர்த்த மழை காரணமாக தற்போது வறண்ட குளங்களே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதத்தில் நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவை விட 413 சதவீதம் அதிக மழை பெய்து வரலாறு படைத்துள்ளது. கனமழை காரணமாக 83 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பெருமழையை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடந்த டிசம்பர் மாதம் எதிர்கொண்டன. டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆறு மற்றும் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது, இரு மாவட்டங்களிலும் ஆற்றங்கரையோர பகுதிகளை திணறடித்தது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களுக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து யாருமே வர முடியாத நிலை உருவானது. தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டாலும், சில இடங்களில் மீட்பு படையினரே உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் காணப்பட்டது. கருங்குளம் பகுதியில் மீட்புப் படையினரையே வெள்ளம் இழுத்து சென்றதையும் காண முடிந்தது. இரு மாவட்டங்களும் சில தினங்கள் பொது விடுமுறையை எதிர்கொண்டன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே சராசரியாக 572.90 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாத இயல்பான மழை அளவு 111.6 மி.மீ ஆகும். கடந்தாண்டு பெய்த மழை அளவை கணக்கீட்டால் இயல்பான மழை அளவை விட 413.4 சதவீதம் அதிக மழையை நெல்லை மாவட்டம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முழுவதும் நெல்லை மாவட்டம் 1243.12 மிமீ மழையை பெற்றுள்ளது. இதுவும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிக மழையளவாகும். நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் 7 ஆயிரத்து 588.69 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் நெற்பயிர் 2617 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 4711 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 254 ஹெக்டேர் பரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை டிசம்பர் மாத வெள்ளத்தில் 389.31 ஹெக்டேர் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பழப்பயிர்கள் 199 ஹெக்டேர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 181 ஹெக்டேர் பரப்பிலும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, சிற்றாறு, கோதையாறு வடிநில கோட்டங்களில் நீர்நிலைகள் உடைப்பினால் வயல்வெளி பரப்பில் மணல் திட்டுக்கள் மற்றும் வயல்வெளிகளில் மண் அரிப்பு 283.225 ஹெக்டேரில் ஏற்பட்டுள்ளதாக வேளாண் பொறியியல் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஜனவரி மாதத்தில் வறண்ட குளங்கள் என்பதே இல்லை என்பதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 1097 குளங்களிலும் நீர் இருக்கும் நிலையில், 900 குளங்களில் 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வெள்ளம் காரணமாக தாமிரபரணி பாசன கோட்டத்தில் மொத்தம் 23 கால்வாய்களில் 108 உடைப்புகள் ஏற்பட்டன. 83 குளங்களில் 94 உடைப்புகள் ஏற்பட்டன. இக்குளங்கள் மற்றும் கால்வாய்களில் தற்காலிக சீரமைப்பு பணிகள் ரூ.18 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களில் பணிகள் நடந்து வருகின்றன. சிற்றாறு வடிநில கோட்டத்தில் நெல்லை மாவட்ட பகுதிகளில் 43 குளங்களிலும், 32 வரத்து கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. கோதையாறு வடிநிலக் கோட்டத்தில் 7 குளங்களில் உடைப்பும், 2 வரத்து கால்வாய்களில் பாதிப்பும் ஏற்பட்டது. இவையும் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி துறையின் கீழுள்ள குளங்களில் 44 குளங்களிலும், 4 ஊரணிகளிலும் இரு நாள் வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அவையும் ரூ.51 லட்சம் செலவில் இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.

* நிரம்பி வழியும் அணைகள்

கடந்தாண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு நெல்லை மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் நெல்லை மாவட்டத்தில் ஒரு அணையில் கூட நீர்மட்டம் சதம் அடிக்கவில்லை. இவ்வாண்டு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளும் சதம் அடித்திருப்பதோடு, 97 சதவீதத்திற்கும் மேலான நீர் இருப்பை கொண்டுள்ளன. வடக்கு பச்சையாறு, நம்பியாறு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிற்கின்றன. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் நெல்லை மாவட்ட அனைத்து அணைகளிலும் மொத்த நீர் இருப்பு 326 அடியாக இருந்தது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அனைத்து அணைகளின் நீர் இருப்பு 503 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.

The post இயல்பை விட 413 சதவீதம் அதிகம் கொட்டி தீர்த்தது நெல்லையில் டிசம்பரில் சராசரியாக 572 மிமீ மழை: வறண்ட குளங்களே இல்லாத நிலை உருவானது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai district ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசுவதால் வெடிமருந்து...