×

மக்கள் பீதி!: ஆவடி மாநகராட்சியில் குழந்தைகள், முதியவர்களை கடித்து குதறும் தெரு நாய்கள்..2 வாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

திருவள்ளூர்: ஆவடி சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் கடந்த 2 வாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், முதியவர்களை கடித்து குதறும் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பிரகாஷ் நகரில், கடந்த பொங்கல் அன்று சிறுமியை தெருநாய்கள் சூழ்ந்துகொண்டு கடித்து குதறின. சிறுமியை மீட்க முயன்ற மூதாட்டியையும் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநின்றவூரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பல முறை புகார் அளித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு சில பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடிக்க சென்றாலும், அவற்றை வளர்ப்பவர்கள் தகராறில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆவடி அரசு மருத்துவமனையில், கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை 413 பேரும், இந்த மாதம் தொடங்கியது முதல் 157 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆவடி மாநகராட்சி முழுவதும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. அவற்றில் 6 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால் சாலையில் திரியும் நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. பள்ளிகள் செயல்படும் பகுதிகளிலும், தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக புகார் கூறும் பொதுமக்கள், தெருநாய்கடி தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க ஆவடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மக்கள் பீதி!: ஆவடி மாநகராட்சியில் குழந்தைகள், முதியவர்களை கடித்து குதறும் தெரு நாய்கள்..2 வாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Avadi Corporation ,Thiruvallur ,Avadi ,Thiruvallur District ,Tiruninnavur ,Corporation ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...