×

ரயில்வே பாலம், கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி ஒழுகினசேரி சந்திப்பு வழியாக போக்குவரத்தை தடை செய்தால் நாகர்கோவில் ஸ்தம்பிக்கும்: ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் அதிகாரிகளிடம் மேயர் மகேஷ் வலியுறுத்தல்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகரின் நுழைவு பகுதியாக இருப்பது ஒழுகினசேரி சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பு வழியாக தான் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் நாகர்கோவிலுக்குள் நுழைய வேண்டும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி உள்பட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் இதன் வழியாக தான் செல்ல வேண்டும். கன்னியாகுமரி – திருனந்தபுரம் ரயில் பாதையும் ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது. இதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே பாலமும் கட்டப்பட்டுள்ளது. இது தவிர பழையாற்றின் குறுக்கே ஆற்றுப்பாலமும் அமைந்துள்ளது. இந்த இரு பாலங்களை கடந்து தான், ஒழுகினசேரி சந்திப்பு வந்தடைந்து, நாகர்கோவில் நகருக்குள் வர முடியும். 24 மணிநேரமும் இந்த பகுதி வழியாக போக்குவரத்து இருக்கும்.

இந்த நிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிக்காக கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக தற்போது உள்ள ரயில்வே பாலத்தையொட்டி, புதிதாக ரயில்வே சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதே போல் ஒழுகினசேரி பாலத்தின் கீழ், இரட்டை ரயில் பாதைக்காக கூடுதல் தண்டவாளமும், உயரழுத்த மின் கம்பிகளும் அமைக்கப்பட வேண்டும். மேலும் பழைய பாலத்தை முழுமையாக அகற்றவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த பணிக்காக ஒழுகினசேரி பகுதியில் முழுமையாக போக்குவரத்தை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாவட்ட கலெக்டர் தர் தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வு நடந்தது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்கிற வாகனங்கள் வடசேரி அசம்பு ரோடு வழியாக புத்தேரி, கீழ புத்தேரி சென்று அங்கிருந்து அப்டா மார்க்கெட் நான்கு வழி சாலையை அடைந்து, அதன் வழியாக திருநெல்வேலி நோக்கி செல்லும் வகையிலும், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வருகின்ற வாகனங்கள் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், இறச்சகுளம், புத்தேரி, அசம்பு ரோடு வழியாக வடசேரி வரும் வகையிலும் போக்குவரத்தை மாற்றி விடுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஒழுகினசேரி சந்திப்பில் முழுமையாக போக்குவரத்தை துண்டித்தால், நாகர்கோவில் மாநகரமே ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக முழுமையாக போக்குவரத்தை துண்டிக்க கூடாது என்று மாநகர மக்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த பிரச்னை தொடர்பாக மாநகர மேயர் மகேசிடம் பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் ஒழுகினசேரி பகுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ரயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது ரயில்வே அதிகாரிகளிடம் பேசிய மகேஷ், ஒழுகினசேரி சந்திப்பு வழியாக முழுமையாக போக்குவரத்தை நிறுத்தினால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். அசம்பு ரோடு என்பது ஏற்கனவே குறுகிய சாலை ஆகும். இங்கு இப்போதே கடுமையான போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இன்னும் வாகனங்களை அந்த வழியாக திருப்பினால் நகரமே ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஒழுகினசேரி சந்திப்பை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வர வேண்டிய வாகனங்களை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வடசேரியில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இதற்கான தற்காலிக ரோடுகளை ரயில்வே அமைக்க வேண்டும்.

ரயில்வே அதிகாரிகள் மாநகர மக்களை பற்றி சிந்திக்காமல் முழுமையாக ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வாகனங்களை நிறுத்தினால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்றார். அப்போது வந்திருந்த ரயில்வே பெண் அதிகாரி தரப்பில் பாலம் அமைக்கும் பணியையும், கூடுதல் தண்டவாளம் பணியையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கிறது. இதற்காக பழைய பாலத்தை அகற்ற வேண்டும் என்றார். அப்போது மேயர் மகேஷ், இரு பணிகளையும் ஒரே சமயத்தில் முடிக்க நினைத்து, மக்களை துன்பப்பட வைக்காதீர்கள். முதலில் பால பணிகளை முடித்து போக்குவரத்தை திறந்து விடுங்கள். பின்னர் தண்டவாளம் அமைக்கும் பணியை செய்யுங்கள். அப்போது பழைய பாலத்தை அகற்றினாலும் பிரச்னை இல்லை. மக்கள் நலன் தான் முக்கியம் ஆகும். ஒழுகினசேரி சந்திப்பை முழுமையாக அடைத்தால், மாநகர மக்கள் கடும் அவதி அடைவார்கள். மேலும் காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, நாகர்கோவில் நகருக்குள் வர வேண்டிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அவதி அடைவார்கள் என்றார்.

அப்போது பெண் அதிகாரி, மாவட்ட கலெக்டர், ரயில்வே அதிகாரிகளிடம் பேசி ஒரு வழிப்பாதைக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த ஒரு வழிப்பாதை எப்படி அமையும் என்பதை ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறி சென்றார். இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் அட்சயா கண்ணன், திமுக நிர்வாகிகள் எம்.ஜே. ராஜன், அருண்காந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசக்கிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

* ரயில்வே கட்டிடத்தை இடிக்க வேண்டும்

ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வேக்கு சொந்தமான கட்டிடம் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும். இந்த கட்டிடத்தை அகற்றினால், போக்குவரத்து தடையில்லாமல் செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என மேயர் மகேஷ் கூறினார்.

* பழைய பாலம் வலுவிழப்பா?

ஒழுகினசேரியில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரயில்வே பாலத்தை முழுமையாக இடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் தான் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்கிறார்கள். ரயில்வே தரப்பில், கூடுதல் தண்டவாளத்துக்காக பழைய பாலத்தின் தூண்கள் அகற்றப்பட வேண்டும். கனரக வாகனங்கள் வந்தால் பாலம் வலுவிழக்கும் என்றனர்.

* கலெக்டருடன் சந்திப்பு

ஒழுகினசேரியில் போக்குவரத்து நிறுத்தம் தொடர்பான பிரச்னை குறித்து நேற்று மதியம் மாநகராட்சி மேயர் மகேஷ் கலெக்டர் தரை சந்தித்து பேசினார். அப்போது அவர் புதிய பாலம் கட்டி முடித்த பின்னர் தான் பழைய ரயில்வே பாலத்தை இடிக்க வேண்டும். அதற்கு முன் பழைய பாலத்தை இடிக்க போக்குவரத்தை நிறுத்தினால், மக்கள் கடும் அவதி அடைவார்கள். அசம்பு ரோட்டில் கடும் நெருக்கடி ஏற்படும். புத்தேரி, பூதப்பாண்டி, அருமநல்லூர், தெரினசங்கோப்பு, காட்டுப்புதூர், கடுக்கரை மற்றும் 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அசம்பு ரோடு வழியாக தான் பஸ் போக்குவரத்து, வாகன போக்குவரத்து உள்ளது. புத்தேரி நான்கு வழிச்சாலை வழியாக தான் டாரஸ் லாரிகளும் செல்கின்றன. எனவே முற்றிலும் போக்குவரத்தை மாற்றினால் கடும் நெருக்கடி ஏற்படும் என்றார். கலெக்டரும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார்.

 

The post ரயில்வே பாலம், கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி ஒழுகினசேரி சந்திப்பு வழியாக போக்குவரத்தை தடை செய்தால் நாகர்கோவில் ஸ்தம்பிக்கும்: ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் அதிகாரிகளிடம் மேயர் மகேஷ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Mayor Mahesh ,NAGARGO ,Nagarkov ,Nagercoil ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்