×

பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் பிரபல உணவகம் உள்பட 40 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: உணவு மாதிரி பகுப்பாய்வு

அண்ணாநகர், ஜன.20: திருமங்கலத்தில் உள்ள பிரபல உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகம் உள்பட 40 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவரது நண்பர் அஜய் (28). இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருமங்கலத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், ‘‘திருமங்கலத்தில் உள்ள உணவகத்தில் நாங்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது, சிக்கன் துர்நாற்றம் வீசியது. உடனே சாப்பிடுவதை நிறுத்தினோம். சிறிது நேரத்தில் எங்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுபற்றி உணவக ஊழிரியர்களிடம் கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் தகராறு செய்தனர். நாங்கள் பாதிக்கப்பட்டது போல் மற்றவர்களும் பாதிக்க கூடாது.

திருமங்கலம் பகுதியில் இதே போல் சுமார் 40க்கும் மேற்பட்ட உணவகம் மற்றும் பாஸ்புட் கடைகள் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்வதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், மேற்கண்ட உணவகத்தை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மேற்கண்ட உணவத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்து சிக்கன் பிரியாணி மற்றும் 17 உணவுகளை மாதிரி எடுத்தனர்.

பின்னர், தரமற்ற உணவு விற்பனை செய்வது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கடையின் உரிமையாளரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரித்தார். இதுகுறித்து உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரியாணி சாப்பிட்ட இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்து 17 உணவு மாதிரி எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருமங்கலம் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் 40க்கும் மேற்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து உணவு மாதிரி எடுத்துள்ளோம். சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

The post பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் பிரபல உணவகம் உள்பட 40 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: உணவு மாதிரி பகுப்பாய்வு appeared first on Dinakaran.

Tags : Food safety ,Annanagar ,Tirumangalam ,food safety department ,Dinakaran ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...