×

அரசு துறைகளின் சேவையை ஒரே இடத்தில் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 9 மண்டலங்களில் இன்று நடக்கிறது :  துறை வாரியாக பல்வேறு அரங்குகள்  மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்

அம்பத்தூர், ஜன.20: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் 3,547 மனுக்களும், நேற்று 5,845 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட 9 மண்டலங்களில் இன்று (20ம்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்படும் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலிமனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை தொடர்பாகவும் மனு ெகாடுக்கலாம்.

மின்வாரியம் சார்பில் வழங்கப்படும் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின் சுமை கட்டணங்கள் தொடர்பாகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, இணைய வழி பட்டா, நில அளவீடு, வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, முதிர்க்கன்னி, மூன்றாம் பாலினத்தோருக்கான உதவி தொகைகள் தொடர்பாக மனு கொடுக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, மொபட், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கை கால், காது கேட்கும் கருவி மற்றும் இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள், சுயதொழில் வங்கி கடனுதவி, கல்வி உதவித் தொகை, தொழில் பயிற்சி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை தொடர்பாகவும் மனு கொடுக்கலாம்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல் மற்றும் ஓய்வூதியம், உதவித்தொகை தொடர்பாகவும், கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டிய விண்ணப்பம், வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுஆணை, விற்பனை பத்திரம் தொடர்பாகமனு கொடுக்கலாம்.

மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் கல்வி உதவித் திட்டம், ஆதரவற்றோருக்கான உதவித்தொகை தொடர்பாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டுமனை, இணையவழி பட்டா தொடர்பாகவும், தாட்கோ கடனுதவிகள், டாம்கோ, டாப்செட்கோ கடனுதவிகள், கூட்டுறவு கடனுதவிகள், மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கடனுதவி தொடர்பான மனுக்களையும் கொடுக்கலாம்.

மண்டலம் வார்டு எண் முகாம் நடைபெறும்
இடங்கள்
திருவொற்றியூர் 12 செயின்ட் பவுல் மகாஜனா மேல்நிலைப்பள்ளி, சாத்தாங்காடு பிரதான சாலை, திருவொற்றியூர்.
மாதவரம் 33 எஸ்.வி.மஹால், வில்லிவாக்கம் சாலை.
தண்டையார்பேட்டை 44 விவேகானந்தா பள்ளி, வியாசர்பாடி.
ராயபுரம் 57 சென்னை உயர்நிலைப்பள்ளி, வால்டாக்ஸ் சாலை.
திரு.வி.க.நகர் 77 கே.பி.பார்க், எண்.18, பழைய ஆடுதொட்டி சாலை, சூளை.
அம்பத்தூர் 92 சந்தான சீனிவாசன் பெருமாள் மக்கள் தொண்டு நிறுவனம், முகப்பேர், மேற்கு.
அண்ணாநகர் 104 கம்பர் குடியிருப்பு விளையாட்டு மைதானம், அண்ணா நகர் மேற்கு.
105 எம்எம்டிஏ சமூக நலக்கூடம், அரும்பாக்கம்.
தேனாம்பேட்டை 119 சென்னை நடுநிலைப்பள்ளி, பேகம் சாகிப் தெரு, ராயப்பேட்டை.
ஆலந்தூர் 163 சந்திரசேகர சமூக நலக் கூடம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆதம்பாக்கம்.

The post அரசு துறைகளின் சேவையை ஒரே இடத்தில் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 9 மண்டலங்களில் இன்று நடக்கிறது :  துறை வாரியாக பல்வேறு அரங்குகள்  மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Project ,Camp ,Ambattur ,Chennai Municipal Corporation ,M. K. Stalin ,Chennai Corporation ,Chief Minister's Project Camp with ,Dinakaran ,
× RELATED என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது...