×

திருவள்ளூர் நகராட்சியில் தொழில் வரி செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’: நடவடிக்கைகள் தொடரும் என ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர், ஜன. 20: திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில், வீடு, வணிக வளாகம், அரசு கட்டிடங்கள் என, 12,724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. வீட்டு வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில்வரி ஆகியவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு ₹12 கோடி வரி விதிக்கப்படுகிறது. இதில், திருவள்ளூரில் செயல்படும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் வாயிலாக பெறப்படும், தொழில் வரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. திருவள்ளூரில் தற்போது, 2,914 வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் 1,245 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள, 1,669 வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனையடுத்து, நகராட்சி அனுமதி கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவற்றை முறையாக செலுத்த வேண்டும் என, வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், பலர் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த, நகராட்சி ஆணையர் டி.வி.சுபாஷினி நீண்ட காலமாக அனுமதி மற்றும் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு, ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நகராட்சி உதவி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் தலைமையிலான ஊழியர்கள், முதல் கட்டமாக சி.வி.நாயுடு சாலையில் இரண்டு கடைகளுக்கு தொழில் வரி செலுத்தாததால் ‘சீல்’ வைத்தனர். மேலும், தொழில்வரி செலுத்தாமல் உள்ள கடைகளுக்கும், சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என, ஆணையர் டி.வி.சுபாஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருவள்ளூர் நகராட்சியில் தொழில் வரி செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’: நடவடிக்கைகள் தொடரும் என ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Municipality ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...