×

தினமும் தாமதமாக வருவதால் ஆத்திரம் ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம்: மதுராந்தகத்தில் பரபரப்பு

மதுராந்தகம், ஜன.20: மதுராந்தகம் ரயில் நிலையத்தில் விழுப்புரம் பேசஞ்சர் ரயில் தினமும் தாமதமாக வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் தேஜஸ் ரயில் உள்ளிட்ட இரண்டு ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.

குறிப்பாக, விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் அதிகளவு பயணிகள் செல்வார்கள். இந்நிலையில், தினமும் விழுப்புரம் பயணிகள் ரயில் தாமதமாக வருவதாக பயணிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 6.40 மணிக்கு வரவேண்டிய ரயில் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, அரை மணி நேரத்திற்கு மேலாக ரயிலை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே ஊழியர்கள், ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், கடந்த சில நாட்களாக அதிக பனிப்பொழிவு காரணமாக ரயில் தாமதமாக வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மதுராந்தகத்திலிருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இவர்களை கருத்தில் கொண்டு, காலை வேலைகளில் இவ்வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கிச் சென்ற பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றன. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், மதுராந்தகத்திலிருந்து தினமும் விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் ₹45 செலுத்தி சென்னை சென்று வருகிறேன். சில மாதங்களாக இந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து அடுத்தடுத்த அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று லோக்கல் ட்ரெயினாக செயல்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் ₹45 செலுத்திவிட்டு செங்கல்பட்டு அடுத்த ரயில் நிலையங்களில் பேசஞ்சர் நின்று செல்வதால் ₹5, ₹10 டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் ஏறி இறங்கி செல்கின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. முன்பு செயல்பட்டதை போன்று செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரயில் நிலையம் மட்டும் நின்று சென்றால் வேலைக்குச் செல்ல சிரமம் இருக்காது என கூறினார்.

செவி சாய்க்காத நிர்வாகம்
கடந்த 15 ஆண்டுகளாக முன்னாள் எம்எல்ஏக்கள் காயத்ரி தேவி, புகழேந்தி, எம்பி செல்வம், எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் கூடுதலாக ரயில்கள் நிற்க வேண்டும். கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களுடன் டெல்லி வரை சென்று பலமுறை மனு கொடுத்தும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

புகார் எழுதியதுதான் மிச்சம்
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் புத்தகத்தில் பல பயணிகள் புகார் எழுதி நிரம்பியதுதான் மிச்சம். அதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் இதுவரை செய்ய வில்லை என ரயில் நிலைய அதிகாரியிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

கூட்ட நெரிசலால் விபத்து
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் ரயிலில் ஏற முடியாமல் பல பயணிகள் கீழே விழுந்து கை, கால் முறிவு என விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு மதுராந்தகத்தை சேர்ந்த நேதாஜி என்ற கல்லூரி மாணவன் ரயிலில் ஏற முடியாமல் தவறி விழுந்து, ரயில் சக்கரங்களில் சிக்கி பரிதாபமாக பலியானதும் குறிப்பிடத்தக்கது.

The post தினமும் தாமதமாக வருவதால் ஆத்திரம் ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம்: மதுராந்தகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Maduranthagam ,Madhurandakam ,Maduraandakam ,Madhuranthakam ,Seyyur ,Chengalpattu ,
× RELATED காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்