×

பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக சில ஊழியர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் இந்த வழக்கில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால் வழக்கின் விசாரணையை சற்றுநேரம் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதை நீதிபதி ஏற்கவில்லை.

இதை தொடர்ந்து, புட்டர் பவுண்டேசன் அமைக்க பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி அளித்துள்ளதாக ஜெகநாதன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்து அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்ததில் ஜெகநாதனின் செயல்பாடு எந்தவித குற்றநோக்கத்துடன் இருப்பதாக தெரியவில்லை. எனவே, காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். அப்போது, விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் கோரினார்.

இதையடுத்து, குற்றம் தொடர்பான ஆவணங்களுடன் தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யபட்டதை ஏற்க மறுத்தும், அவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியும் சேலம் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சேலம் காவல்துறை கூடுதல் ஆணையர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, காவல்துறை பதிவுசெய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,CHENNAI ,Elangovan ,University Staff Association ,Salem Periyar University ,Vice ,R. Jaganathan ,Periyar University Technology Entrepreneurship and Research Foundation ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...