×

நியமனம் செய்யப்படாமல் 5 ஆண்டுக்கு மேலாக 47 கோயில் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா? தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 47 கோயில்களில் உரிய முறையில் நியமனம் செய்யப்படாமல் செயல் அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்கிறார்களா என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்க, எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகாவாச்சாரி, வழக்கறிஞர் அபினவ் பார்த்தசாரதி ஆகியோரும், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனும் ஆஜராகினர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எந்த நியமன உத்தரவு இல்லாமலும், கால வரம்பு இல்லாமலும் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திரிசூலம் திரிசூலநாதர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள 47 கோயில்களில் செயல் அலுவலர்கள் உரிய நியமனம் இல்லாமல் பணியில் தொடர்கிறார்கள்.

இதுகுறித்து அறநிலைய துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் பணியில் தொடர தடையில்லை என்று பதில் தரப்பட்டுள்ளது என்றார். அதற்கு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அறங்காவலர்கள், தக்கார்கள் இருந்தாலும் செயல் அலுவலர்களை நியமிக்க முடியும். அவர்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் நீடிக்கும் வகையில் 2015ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, மனுதாரர் குறிப்பிடும் 47 கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

The post நியமனம் செய்யப்படாமல் 5 ஆண்டுக்கு மேலாக 47 கோயில் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா? தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...