×

அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணிகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 3.20 கி.மீ. நீளத்திற்கு கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை, அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்படுகிறது.

தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாண்டோர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீ அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது. எனவே ஆழம் குறைந்த அடித்தளம் மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பணி (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் கணபதி, துணை மேயர் மகேஷ் குமார், துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணிகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Annasalai ,Thenampet ,Saidapet ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Highways Department ,Saidapettai, Chennai ,Anna Road ,Saidapettai ,Dinakaran ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...