×

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை பா.ஜ. நிர்வாகி, மகன் உள்பட 4 பேர் மீது போலீஸ் வழக்கு

கன்னியாகுமரி: குமரியை சேர்ந்த பெண்ணிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பாஜ நிர்வாகி, அவரது மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் எறும்புக்காடு அருகே உள்ள மேலதாராவிளை பகுதியை சேர்ந்தவர் தக்‌ஷா (28). இவர், கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும், நெல்லை மாவட்டம் களக்காடு மேலமாவடி மலையடிபுதூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் (31) என்பவருக்கும், கடந்த 15.12.2019 அன்று திருமணம் நடைபெற்றது.

எங்களது திருமணத்தின் போது 400 பவுன் தங்க நகைகளும், ரூ.30 லட்சம் ரொக்கம், 2 ஏக்கர் தென்னந்தோப்பு, ஒரு கார், 2 லோடு ஆட்டோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்தோம். திருமணம் முடிந்த முதல் நாளில் இருந்தே எனது கணவரும் அவரதும் குடும்பத்தாரும் என்னை புறக்கணிக்க தொடங்கினர். கருப்பாக இருப்பதாக கூறி கேவலமாக பேச தொடங்கினர். கூடுதலாக வரதட்சணை வேண்டும் என கூறி கொடுமைப்படுத்தினர்.
இந்தநிலையில் எனது தந்தையின் பெயரில் உள்ள வீட்டை எழுதி கேட்டு கொடுமைப்படுத்தினர். கொலை மிரட்டல் விடுத்து என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.

எனது கணவருக்கு தற்போது வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அறிந்தேன். இது குறித்து போலீசில் புகார் அளித்தம்நடவடிக்கை இல்லை. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். இதன் பேரில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, தக்‌ஷாவின் கணவர் பால்பாண்டியன், கணவரின் தந்தை சங்கரநாராயணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சங்கர நாராயணன், நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணி மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை பா.ஜ. நிர்வாகி, மகன் உள்பட 4 பேர் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Harsh ,BJP ,Kanyakumari ,Kumari ,Daksha ,Meladaravlai ,Erumbukkadu ,Nagercoil ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?