×

ஒரே நாடு,ஒரே தேர்தல் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது: காங்.தலைவர் கார்கே கருத்து

புதுடெல்லி: ஒரே நாடு,ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி முறை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை உயர் மட்ட குழு கேட்டு வருகிறது.

பொதுமக்களிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக உயர்மட்ட குழுவின் செயலாளர் நிதேன் சந்திராவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. உயர் மட்ட குழு இந்த விஷயத்தில் தன்னுடைய முடிவை எடுத்த பின், கண் துடைப்புக்காக அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டுள்ளதாக தெரிகிறது.

அரசு, நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து மக்களின் தீர்ப்பு மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.அதை விடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒரே நேரத்தில் தேர்தல் போன்ற ஜனநாயக விரோத முறைகளை பற்றி பேசுவது தவறு. மேலும், செழிப்பான மற்றும் வலுவான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு,உயர் மட்ட குழுவைக் கலைக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

The post ஒரே நாடு,ஒரே தேர்தல் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது: காங்.தலைவர் கார்கே கருத்து appeared first on Dinakaran.

Tags : Congress ,Kharge ,New Delhi ,president ,Mallikarjuna Kharge ,Former ,Ram Nath Kovind ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....