×

ஒரே மொழி, ஒரே தலைவர் என்ற அடிப்படையில் டெல்லியில் இருந்து மாநிலங்களை ஆள முயற்சி: பாஜ, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் குற்றச்சாட்டு

வடக்கு லக்கிம்பூர்: ஒரே மொழி, ஒரே தலைவர் என்ற முறையில் பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவை டெல்லியில் இருந்து மாநிலங்களை ஆள முயற்சிக்கின்றன ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலம், வடக்கு லக்கிம்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘ஒரே தலைவர், ஒரே மொழி என்ற அடிப்படையில் டெல்லியில் இருந்து மாநிலங்களை ஆட்சி செய்யும் முறையை பாஜ, ஆர்எஸ்எஸ் ஆதரிக்கின்றன. அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

இதில் காங்கிரஸ் உடன்படவில்லை. டெல்லியில் இருந்தபடி அசாமை ஆளுதல் கூடாது. அசாம் மாநிலத்தில் இருந்து தான் அசாமை ஆள வேண்டும். அனைத்து மாநிலங்களையும் காங்கிரஸ் சமமாக மதிக்கிறது. அதனால்தான் வட கிழக்கு பகுதியான மணிப்பூரில் இருந்து மேற்கில் உள்ள மும்பை வரை ஒற்றுமை நீதி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை போலவே வட கிழக்கு மாநிலங்களும், அந்த மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது.

அந்த மாநிலத்தில் இன குழுக்களிடையே மோதல் வெடித்து போர் ஏற்பட்டுள்ளது போன்ற நிலை உருவாகியது. இத்தனை மாதங்கள் கடந்த பின்னரும் பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு ஒரு முறை கூட செல்லவில்லை. ஏனென்றால் பாஜவின் அரசியல் உண்மைத்தன்மை வெளிச்சமாகி விடும் என்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது’’ என்றார். இதற்கிடையே ஜோர்காட்டில் அனுமதிக்கப்பட்ட வழியில் இருந்து வேறு ஒரு வழியாக சென்றதற்காக யாத்திரையின் தலைமை அமைப்பாளர் கே.பி.பைஜூ மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post ஒரே மொழி, ஒரே தலைவர் என்ற அடிப்படையில் டெல்லியில் இருந்து மாநிலங்களை ஆள முயற்சி: பாஜ, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rahul ,BJP ,RSS ,North Lakhimpur ,Rahul Gandhi ,Congress ,president ,India Unity Justice Yatra ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...