×

திருவிழா காலங்களில் பக்தர்கள் நெரிசலின்றி செல்வதற்கு வசதியாக நெல்லையப்பர் கோயிலில் ரூ.16 லட்சத்தில் சில்வர் கம்பி தடுப்புகள்


நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் திருவிழா காலங்களில் பக்தர்கள் நெருக்கடி இன்றி வரிசையில் நின்று சுவாமி, அம்பாள் தரிசனம் செய்ய ரூ.16 லட்சம் செலவில் உபயதாரர்கள் மூலம் தற்காலிக சில்வர் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலாகும். இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி நெல்லையப்பர், அம்பாள் காந்திமதிக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுவாமி, அம்பாள் சன்னதியை இணைக்கும் வகையில் சங்கிலி மண்டபம் அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆனித்தேரோட்ட திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா, தைப்பூச திருவிழா முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

ஆனித்தேரோட்ட திருவிழாவில் தேரோட்டத்தை காண பல லட்சம் பக்தர்கள் நெல்லையப்பர் கோயிலுக்கு திரண்டு வருவர். இதேபோல் ஒவ்வொரு திருவிழா காலத்திலும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த கம்புகள் கட்டிவைத்து சுவாமி, அம்பாள் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தற்போது உபயதாரர்கள் மூலம் ரூ.16 லட்சம் செலவில் விழா காலங்களில் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி, அம்பாள் சன்னதிக்கு செல்லும் வகையில் சுவாமி சன்னதி வெளிபிரகாரத்தில் நடுபகுதியில் அமைந்துள்ள தெட்சினா மூர்த்தி சன்னதியில் இருந்து மாக்காளை வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைந்து இசைதூண்கள் உள்ள மணி மண்டபம் வழியாக சுவாமி சன்னதிக்கு பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையிலும், இதேபோல் அம்பாள் சன்னதி கொடிமரம் அருகில் இருந்து அம்பாள் சன்னதி உள்பகுதிக்கு பக்தர்கள் செல்லும் வகையில் சில்வர் கம்பிகள் மூலம் தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த தடுப்பு கம்பிகள் திருவிழா காலங்களில் மட்டும் பயன்பாட்டுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிமெண்ட் கட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள துளைகளில் கம்பிகளை வைத்து தடுப்புகள் அமைக்கப்படும். திருவிழா முடிந்ததும் தடுப்புகள் அகற்றி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருவிழா காலங்களில் பக்தர்கள் நெருக்கடியின்றி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

The post திருவிழா காலங்களில் பக்தர்கள் நெரிசலின்றி செல்வதற்கு வசதியாக நெல்லையப்பர் கோயிலில் ரூ.16 லட்சத்தில் சில்வர் கம்பி தடுப்புகள் appeared first on Dinakaran.

Tags : Nellayapar temple ,Nellai ,Nellaipar Temple ,Swami ,Ambal ,South Tamil Nadu ,Nellaiappar temple ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...