×

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சீதாதேவிக்காக தயாரான விசேஷ வாழைநார் புடவை: விமானம் மூலம் அனுப்பி வைப்பு

சென்னை: அயோத்தி ராமர் கோயிலில், 22ம்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, கோயிலில் உள்ள சீதாதேவிக்கு அணிவிப்பதற்காக, சென்னை அனகாபுத்தூரில் தயாரான விசேஷ வாழைநார் புடவை நேற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உ.பி. மாநிலம், அயோத்தி மாவட்டத்தில் ராம ஜென்ம பூமி உள்ள இடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை மூலம் சுமார் 1800 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் கோயிலில் திருப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், வரும் 22ம்தேதி கும்பாபிஷேக விழா மற்றும் திறப்பு விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏற்கனவே பெரிய அளவிலான வெண்கல மணி, சாமி சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல பயன்படுத்தும் மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள சீதாதேவிக்கு அணிவிப்பதற்காக தற்போது 20 அடி நீளத்தில் வாழை நார் புடவை ஒன்று விசேஷகமாக தயார் செய்யப்பட்டது. இந்த புடவை 4 அடி அகலமும், 20 நீளத்துடனும் தயாரிக்கப்பட்டது. அயோத்தியில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் ராமர் கோயிலில் நிறுவப்பட உள்ள சீதா தேவிக்கு இந்த புடவை அணிவிப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புடவை அனுப்பி வைக்கப்பட்டது என்று குழுமத்தின் தலைவர் சேகர் கூறினார். மேலும், அவர் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக வாழை நார்களில் இருந்து இதுபோன்று புடவை நெய்து வருகிறோம். ஒரு குடும்பமாக இந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வாழை நார்களில் இருந்து மட்டுமின்றி, கற்றாழை, அன்னாசி, மூங்கில் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கும் நார்களையும் இழைத்து அதிலிருந்து பெண்கள் அணியும் புடவை, கைப்பை, பேன்ட், சட்டை ஆகியவற்றை தயார் செய்து வருகின்றனர்.

இங்கு, தயார் செய்யப்படும் பொருட்கள் யாவும் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் இவற்றிற்கு மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டினர் இங்கு தயார் செய்யப்படும் புடவைகளை ஆர்வத்துடன் ஆன்லைன் வாயிலாக அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு சீதாதேவிக்கு அணிவிப்பதற்காக முன்பே திட்டமிட்டு, எங்களது குழுவினர் 10 பேர் கடந்த 7 நாட்களாக இரவு பகல் என்று பாராமல், வாழை நார், பருத்தி இலை, பட்டு ஆகியவை கொண்டு நெய்து இந்த புடவையை உருவாக்கினோம். இதனை இலவசமாக நாங்கள் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்காக எங்களது கரங்களால் நெய்து, அதனை நேற்று விமானம் மூலம் கோயிலுக்கு அனுப்பி வைத்தோம். இதன்மூலம் எங்களுக்கு முழு மனதிருப்தி ஏற்படுவதாக கூறினார்.

The post அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சீதாதேவிக்காக தயாரான விசேஷ வாழைநார் புடவை: விமானம் மூலம் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram Temple ,Goddess ,CHENNAI ,Kumbabhishek ,Anakaputtur, Chennai ,Sita Devi ,UP ,Rama ,Ayodhya district ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...