×

குடலைக் காக்கும் ப்ரீபயாடிக் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் பிச்சையா காசிநாதன்

புரோபயாடிக் நுண்ணுயிரிகளால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம். தயிர், இட்லி மாவு, பாலாடைக்கட்டி, மோர் மற்றும் ரொட்டி போன்ற உணவுகளில் இயற்கையாகவே இது உள்ளது. இது செரிமான அமைப்புக்கு உதவும் ஒரு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ப்ரீபயாடிக்குகள் அதிகம் உள்ள உணவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நமது செரிமான மண்டலத்தில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் உணவுகளை ஜீரணிக்க மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றன. நமது உணவுத் தேவையைப் போலவே, குடல் பாக்டீரியாவும் செயல்பட ஆற்றல் தேவைப்படுகிறது. ப்ரீபயாடிக்குகள் இந்த நுண்ணிய குடல் நண்பர்களுக்கு அளிக்கப்படும் நார்ச்சத்து நிறைந்த உணவு ஆகும்.

பெரிய குடலில் ப்ரீபயாடிக்குகளின் நொதித்தலின் விளைவாகக் கொழுப்பு அமிலங்கள் வெளியிடப்படுகின்றன. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் பெருங்குடலில் உள்ள செல்களால் மேலும் உறிஞ்சப்படுகிறது. நமது குடல் நுண்ணுயிரியானது பெருங்குடல் புற்றுநோய், அழற்சி குடல் நோய் மற்றும் வகை II நீரிழிவு போன்ற நோய்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நமது செரிமான மண்டலத்தில் வசிக்கும் நுண்ணுயிரிகள் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் நாம் தேர்வு செய்யும் வாழ்க்கை முறைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இயற்கையான ப்ரீபயாடிக் நிறைந்த உணவுகள் பற்றி இந்த கட்டுரையில் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. நாம் தினமும் உண்ணும் பல்வேறு வகையான உணவுகளில் ப்ரீபயாடிக் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. எளிதில் கிடைக்கக்கூடிய 7 ப்ரீபயாடிக் உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

நீராகாரம்

பல நூற்றாண்டுகளாக, பழைய சோறு என்கிற நீராகாரம் இந்திய உணவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இதில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளது, இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது மற்றும் மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளை குணப்படுத்துகிறது. வெங்காயம் மற்றும் தயிர் கலந்த நீராகாரம் ப்ரீபயாடிக்குகளுக்கான ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். 12 மணி நேரம் புளிக்கவைக்கப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து சமைத்த அரிசியை விட 21 மடங்கு அதிகமாக இருக்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் வீக்கத்தைக் குறைத்து, உங்கள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க உதவுகிறது. மிகவும் கனிந்த அல்லது பழுக்காத வாழைப்பழங்கள் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும். இருப்பினும், இனிப்பு கலந்த தயிருடன் வாழைப்பழத்தை உண்பது அல்லது வாழைப்பழ ஸ்மூத்தியுடன் தயிர் மற்றும் தேன் கலந்து உண்பது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தில் ப்ரீபயாடிக்குகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. வெங்காயம் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் உணவு ஜீரணிப்பை துரிதப்படுத்துகிறது. வெங்காயத்தை சாலடுகள், சாண்ட்விச்கள் மற்றும் சூப்கள் போன்ற உணவு தயாரித்து பச்சையாக உட்கொள்ளலாம். நீராகாரத்துடனும் பச்சையாக சாப்பிடலாம்.

பூண்டு

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது காய்ச்சல் மற்றும் சளிக்கு எதிராக போராட உதவுகிறது. நமது உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும் ஒரு மூலிகை பூண்டு. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பொது ஆரோக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கும் இன்யூலின் மூலமாகவும் இருக்கிறது. பச்சை பூண்டு சிறந்ததாக இருந்தாலும், ஆரோக்கிய நன்மைகளைப் பெற நீங்கள் அதை சமைத்தும் பயன்படுத்தலாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் உள்ள பெக்டின் கொழுப்பை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்க உதவுகிறது. ஆப்பிள் ஃபைபர் ஆபத்தான கிருமிகளைக் குறைக்கிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பில் நன்மை பயக்கும் பாக்டீரியாவை மேம்படுத்துகிறது. ஆப்பிள் தோல்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, சதை பகுதி அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே, முழு ஆப்பிளையும் சாப்பிடுவது அவசியமாகிறது.

பார்லி

கரையக்கூடிய நார்ச்சத்து அடிப்படையிலான ப்ரீபயாடிக்குகள் அதிகம் உள்ள உணவுகள் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். பார்லியில் குளுக்கன் போன்ற கரையக்கூடிய ஃபைபர் கூறுகள் அதிகம் உள்ளது, இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் இரைப்பை குடல் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. இது ஆரோக்கியமான பெருங்குடல் சுவர் மற்றும் பெருங்குடலை பாதுகாக்கப் பயன்படுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியமான இதயம் மற்றும் செரிமான அமைப்பை பாதுகாக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த தானியமாகும். நல்ல குடல் பாக்டீரியாவிற்கு தேவையான குளுக்கன் ஃபைபர் அதிக அளவில் ஓட்ஸில் உள்ளது. ஓட்ஸை பாலில் ஊறவைத்து சமைக்காமல் சாப்பிடலாம் அல்லது வேகவைத்து சாப்பிடலாம். அவை சிறந்த செரிமானம் மற்றும் சர்க்கரை நிர்வகித்தலை எளிதாக்குகின்றன.

The post குடலைக் காக்கும் ப்ரீபயாடிக் உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dietitian ,Bichaiah Kasinathan ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!