×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

செத்து செத்து விளையாடலாமா?

தற்கொலையைப் பற்றி பலரும் பேசுகிறார்கள், சிலர் முயற்சி செய்கிறார்கள், சிலர் தற்கொலை செய்து மரணத்தையும் தழுவுகிறார்கள். இவை எல்லாம் எல்லா காலக் கட்டத்திலும் நடக்கத்தான் செய்கிறது என்றாலும் ஏன் தற்போது இதைப் பற்றி பேசுகிறோம் என்றால், எது எல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்னை இல்லை என்று சமூகம் கட்டமைத்து வைத்திருந்ததோ, அவை எல்லாம் பிரச்னையென்று காரணங்களாக சொல்லி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அதுவும் மிகவும் குறைந்த வயதில் மரணிக்கிறார்கள். இந்த வயதில் எல்லாம் இவர்கள் என்ன மாதிரியான வாழ்க்கையை அனுபவித்திருப்பார்கள் என்று தான் நம்மால் யோசிக்க முடிகிறது.

இன்று இருக்கின்ற சூழலில் ஒரு தற்கொலை முயற்சி என்பது எல்லோருக்கும் சரியான காரணம் இல்லாமல் இருக்கிறது என்ற விஷயம் தான் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துக்கு என்றுமே எந்த ஒரு தீங்கான செயலை மனிதன் செய்யும் போது, அதற்கு பின்னால், சமூகத்துக்கு சொல்ல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படி வலுவான காரணங்கள் இல்லை என்றால், இதற்கு எல்லாம் இதைச் செய்யலாமா அல்லது இதற்கு போய் இதைச் செய்யலாமா என்று வாழ்வியல் தத்துவங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி பழக்கப்பட்ட சமூகத்தில், தற்போதைய சூழலில் சொல்லப்படும் காரணங்கள் எதுவும் மக்களுக்கு முற்றிலும் மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது. அதனாலேயே பெரிய விஷயங்கள் எதுவும் இல்லாமல், ஒரு தற்கொலை முயற்சி நடக்கிறது என்றால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யுவால் நோவா ஹராரி எழுதிய ஹோமோடியஸ் புத்தகத்தில் எழுதிய இந்த வரிகள்தான் நாம் ஏன் உயிரோடு வாழ வேண்டும் என்று சொல்கிறது ‘‘நம்மைப்பற்றியும் நம்முடைய செயல்களைப் பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை, யாரும் நம்முடைய சக்திக்கு எல்லைகளை நிர்ணயிப்பதில்லை. ஆனாலும் நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருப்பதாக நாம் இன்னும் உறுதியாக நம்புகிறோம்”. இப்படியாக ஒரு மனிதன் எதற்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை மதமும், தத்துவவாதிகளும், அறிவியலும் விதம் விதமாக மக்களிடம் வாழ வேண்டும் என்ற ஆசையை உருவாக்குகிறது.

‘‘வாழ்வின் மிகப்பரந்த அனுபவங்களை ஞானமாகக் காய்ச்சி வடிப்பது தான் இருத்தலின் நோக்கம்” இதுவே மனிதவாதத்தின் குறிக்கோள் வாசகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். அந்த அனுபவங்களை உருவாக்க மனிதன் பல வருடங்கள் இந்த பூமியில் நாம் உயிருடன் ஆரோக்கியமாக வேலை செய்து கொண்டும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் உற்ற துணையாக நம் இருத்தலை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் காலம் காலமாக கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஆனால் வளர்ந்த நாடுகளில் விதம் விதமாக உணவு சாப்பிடுவதையும், வித விதமாக புதிய விஷயங்களை உருவாக்குவதையும், அதை எந்த விதத்தில் எல்லாம் அனுபவிக்க முடியும் என்று தெரிந்து கொண்டு, அதை அனுபவிக்கவும் பழகி விட்டார்கள். எதற்காகவும் காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இல்லை என்றும், நினைத்தவுடன் அனைத்தும் அவர்கள் கையில் வந்து விடணும் என்ற சமூக வசதியில் தான் அவர்கள் வாழ்வியல் அமைந்து இருக்கிறது.

ஆனால் நம்முடைய பொருளாதார சமூக மாற்றத்தில் பென்சில் உடைந்து விட்டதா, உடனே புதுசா வாங்குவோம், ஊருக்கு போற அவசரத்தில் ட்ரெஸ் எடுத்து வைக்கவில்லையா, புதுசு வாங்கிக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறார்கள். எதற்கும் திரும்பி வந்து அதை எடுத்து உபயோகிப்போம் என்று நினைப்பது கூட பெரிய இழுக்காக பார்க்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நேரத்தை வீணடிப்பது என்பது அவர்களின் தன்மானத்தை அவமானப்படுத்துவது போல் நினைக்கிறார்கள்.

அதற்கு எந்த வயது வித்தியாசமும் இல்லை. இங்கு ஒவ்வொருவரும் தன்னை ஒரு அலங்காரப் பொருளாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தன்னை மிக உயர்வாகவும், தான் மிகத் தரம் வாய்ந்த உடை அணிந்து இருப்பதாகவும், தன்னுடைய அறிவை தரமான இடத்தில் மட்டுமே செலவு செய்ய வேண்டும் எனவும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அதன் பாதிப்பே அவர்களுக்கு சிறு அவமானமான விஷயம் நடந்து விட்டாலும் அது மிகப்பெரிய அவமானத்தை சந்தித்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்த அவமானம் தன் ஆளுமையை கேள்விக்குறியாக்கி விட்டது எனவும், அதற்கு பலியாக தன் உயிரை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இப்படி ஒரு பக்கம் நடக்கும் போது, மற்றொரு பக்கம் வேறு விதமாக நடக்கிறது. தற்போது சில இடங்களில் சும்மா சாகுறேன் என்று சொல்லி தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்தவித திரில்லிங் அனுபவம் வாழ்க்கையில் இல்லை என்றும், கேட்டது, நினைத்தது எல்லாமே கையில் இருக்கிறது என்றதும், மரணத்தை ஏதோ ஒரு வகையில் திரில்லிங் அனுபவமாக பார்த்து விடலாம் என்றும் இளைஞர்கள் சிலர் இறந்து விட முயற்சிக்கின்றனர்.

டைரக்டர் எரிக்சன் கோர் எடுத்த பாயிண்ட் பிரேக் படம் மிக முக்கியமான விஷயத்தை பேசுகிறது. ஒரு ஐந்து நபர்கள் சேர்ந்து இயற்கையை வென்று, அதன் மூலம் மரணத்தையும் வென்று விடலாம் என்று முடிவு எடுப்பார்கள். வாழ்வதற்கும், இறப்பதற்கும் ஆறு நொடியை மட்டும் எடுத்துக் கொள்வோம் என்று அட்வென்ச்சர் படத்தை எடுத்திருக்கிறார். இயற்கையுடன் இயற்கைக்குள் பயணிக்கும் எட்டு சோதனை விளையாட்டுக்களை கடப்பதுதான் சாதனையாக அந்த ஐந்து நபர்களும் நினைப்பார்கள்.

அப்படி ஒவ்வொரு விளையாட்டும் அமைத்திருப்பார்கள். மலை விட்டு மலையைத் தாண்டுவது, பனிச்சறுக்கலில் வேகமாக விளையாடுவது, கடலின் அலைகளுக்குள் போய்விட்டு வருவது என்று ஒவ்வொரு விதமாக வெற்றியடைய வெறித்தனமான முயற்சியை அந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் நடத்திக் காட்டுவார்கள்.

இப்படி பல இளைஞர்கள் இயற்கை கூட போட்டி போடுவது என்று முடிவு எடுத்து பல சாகச விஷயங்களை செய்ய முயற்சி செய்கிறார்கள். அதில் தோற்று விட்டால் கூட அது அவர்களின் வீரத்திற்கு சமமாக நம்புகிறார்கள். குடும்பத்திடமும், சமூகத்திடமும் வீர தீரச் செயலை செய்யும் போது அதில் ஏற்பட்ட அனுபவங்களை சேகரிப்பதே வாழ்வின் நோக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு இளைஞன் கவுன்சலிங் வேண்டும் என்று வந்தார், அவரிடம் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் அவரது தம்பி தற்கொலை செய்யும் முன் எழுதிய விஷயம் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது என்று சொல்கிறார். அதாவது தம்பிக்கு இருபத்தைந்து வயது என்றும், அதற்குள் இந்த வாழ்க்கை ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இதற்கு மேல் இந்த உலகில் வாழ்வதற்கு பெரிதாக ஈடுபாடு இல்லை என்றும் எழுதி வைத்து மரணித்தும் விட்டார்.

இங்கு எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு ஒரு சலிப்பு வரத் தொடங்கி விட்டது. காலையில் எழுந்து எதற்கு வாக்கிங் போகணும், எதற்கு நண்பர்களுடன் டூர் போகணும், எதற்கு நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்றும், ஏன் குளித்து புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தினந்தோறும் செய்யும் அடிப்படை விஷயங்களில் இருந்து, கொண்டாட்டமான விஷயங்களை செய்யவும் கூட சலிப்பில்தான் பல இளைஞர்கள் இருக்கின்றனர். அந்தச் சலிப்பு எல்லாம் அவர்களின் ஆளுமையில் இருந்து தான் உருவாகிறது. அதை உடைத்து செயல்படவே சலித்துக் கொள்கிறார்கள்.

நம் தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் வாழ்க்கையில் பல பெரிய பிரச்னைகள் இருந்து வந்தது, அதனால் சலிப்பதற்கு எல்லாம் அங்கு நேரமில்லை. தற்போது பலருக்கும் வேலை, நல்ல சம்பளம் இருக்கிறது அல்லது வீட்டில் ஓரளவு பொருளாதார சேமிப்பு இருக்கிறது. அதனால் அவர்களின் இருப்பு எதற்கு என்ற கேள்வியும், உயிரோடு இருந்து என்ன பலன் என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் சும்மாதான் சாகப் போகிறோம் என்றும், ஒரு திரில்லிங்க்காக சாகப் போகிறோம் என்று சொல்லும் இளைஞர்களை நாம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். இவர்களிடம் இருக்கும் அந்தச் சலிப்பையும், திரில்லிங் சொல்லி அவர்கள் வைத்து இருக்கும் பிம்பத்தையும் முதலில் உடைக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்துக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்றும், அதை எந்த அளவுக்கு ஆற்றலுடன் செயல்படுத்தவும் வேண்டும் என்ற விழிப்புணர்வைத்தான் நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.

இந்த மாதிரியான தற்கொலை நிகழ்வுகளும் தற்போதைய மிக முக்கியமான பிரச்னையாக மாறி வருகிறது. அதனால் மன அழுத்தத்தினால் மட்டும்தான் தற்கொலை நடக்கிறது என்று பொதுக்கருத்து சொல்லாமல், சலிப்பின் உச்சக்கட்டமும் தற்கொலை செய்யத் தூண்டுகிறது என்ற பார்வையிலும் பேச வேண்டும், விழிப்புணர்வு தர வேண்டும்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,
× RELATED மனவெளிப் பயணம்