×

ஜோதிட ரகசியங்கள்

இல்வாழ்க்கை நன்றாக அமைய இதைச் செய்யுங்கள்

ஒருவருடைய இல்வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று சொன்னால் சுக்கிரனின் அருள் வேண்டும். நவகிரகங்களில் யோகக்காரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர், அசுரர்களின் குலகுருவாக போற்றப்படுபவர். வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் சரியாக இருந்தால்தான் மண வாழ்க்கை, மகப்பேறு, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அமைய முடியும். சுக்கிரன் அருளைப் பெறுவதற்கான தலங்கள் நிறைய உண்டு.

1. காவிரிக்கரை தலமான கஞ்சனூர் பிரசித்தி பெற்ற சுக்கிரனுடைய தலம். இறைவன்: அக்னீஸ்வரர்; இறைவி: கற்பகாம்பாள்; தல விருட்சம்: பலா, புரசு; தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். இறைவன் பிரம்ம தேவருக்கு திருமண கோலம் காட்டி அருளியதால், வலப் பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார். இங்கு சுக்கிரனுக்கு என்று தனி சந்நதி ஏதும் கிடையாது. சிவனே சுக்கிரனின் வடிவாக காட்சி அளிக்கிறார். இது திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது.

அதைப் போலவே சுக்கிரன் வணங்கிய தலம் திருவரங்கம் மற்றும் திருநாவலூர். 2. சுக்கிரனுக்கு கண்ணைக் கொடுத்த தலம் கும்பகோணம் பக்கத்தில் உள்ள திருவெள்ளியங்குடி என்னும் தலம். இந்தத் தலங்களுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு வருவதன் மூலமாக சுக்கிர தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் தினசரி மாலையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, மகாலட்சுமியை மனம் உருகி வழிபட வேண்டும் அல்லது அம்பாள் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

`ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரப்ரசோதயாத்’

– என்ற காயத்ரி மந்திரத்தை சொல்லி வரலாம்.

இந்த வழிபாட்டின் மூலமாக சுக்கிர தோஷத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

சனி கெடுபலன்கள்தான் செய்வாரா?

நம்மில் அதிகமானவர்கள் சனி என்றாலே மிகவும் அச்சப்படுகிறார்கள். சனி, ஒருவனைக் கெடுப்பதற்கும் தண்டனை தருவதற்கும் உள்ள ஒரு கிரகம் என்கின்ற நம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், சனியினால் உயர்ந்தவர்கள் உண்டு. யாரும் தொடமுடியாத உயரத்தைத் தொட்டவர்கள், சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள்தான் என்றால் வியப்பாக இருக்கும். என்ன விஷயம் என்று சொன்னால், சனி கர்மகாரகன். வேலையை வாங்கிவிட்டுத்தான் கூலியைத் தருவான். மிகக் கடுமையாக உழைத்து பெரிய அளவில் முன்னேறியவர்கள் சனியின் ஆதிக்கத்தில் இருந்தவர்கள்.

அவர்களிடம் நேரம் தவறாமை, தன்னம்பிக்கை, முயற்சி, இரக்கம், நேர்மை, நீதி, தீவிரமான ஆராய்ச்சி, கண்டிப்பு போன்ற விஷயங்கள் இருக்கும். நீடித்த ஆயுளையும், பதவியில் பெரும் புகழையும் தரக்கூடியவர் சனி என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் நீதி தேவதை. மனிதனின் விதியையும் அதிர்ஷ்டத்தையும் நிர்ணயிப்பவர். குறுக்கு வழியில் செல்பவர்களையும், நீதி தவருபவர்களையும் படாத பாடுபடுத்துபவர். ஆனால், நீதிமான் களையும் சாதுக்களையும் காப்பவர்.

சகடயோகம்

சந்திரனுக்கு 6,8,12 போன்ற இடங் களில் குரு அமர்ந்தால் `சகடயோகம்’ என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். இந்த சகடயோகம் என்பது சிறப்பானது அல்ல. ஆனால், இந்த சகடயோகம் பெற்றவர்கள், அவ்வப்பொழுது சங்கடங்களை சந்திப்பார்களே தவிர, ஒரேடியாக தோல்வியடைய மாட்டார்கள். வண்டிச்சக்கரம் ஓடுவது போல இவர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். பெரும் செலவு வரும். வருமானமும் வரும். ஒரு சின்ன மகிழ்ச்சியான சம்பவம் நடந்தால், அதனைத் தொடர்ந்து அந்த மகிழ்ச்சியை போக்கடிக்கும் ஒரு சம்பவமும் நடைபெறும்.

அதிலேயே மூழ்கி இருக்கும்போது மறுபடியும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதை திடமாகவும் பக்குவமாகவும் வைத்துக் கொண்டு தெய்வ பக்தியோடு இருப்பவர்களுக்கு இந்த சகடயோகம் அடங்கி இருக்கும்.

மனைவி அல்லது கணவனால் வரும் பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி?

பொதுவாகவே ஏழாம் இடம் என்பது பெண் ஜாதகமாக இருந்தால், கணவனையும் ஆண் ஜாதகமாக இருந்தால் மனைவியையும் குறிக்கும். லக்னத்துக்கு இணையான பலமுள்ள கிரகம் ஏழாம் இடத்து அதிபதியாக அமைந்து லக்னத்தோடு சுபத்தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் இருவரும் கருத்து ஒருமித்து இருப்பார்கள். அப்படி அமையாவிட்டால் லக்னாதிபதிக்கும் ஏழாம் இடத்து அதிபதிக்கும் உள்ள பாப அல்லது சுபப் பலன் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களிடம் இணக்கம் அல்லது இணக்கமின்மை இருக்கும்.

இவை இரண்டும் பகை ராசியாகவும், பகை கிரகமாகவும் இருந்து, ஒருவருக் கொருவர் 6,8,12-ல் இருந்தால் இருவருடைய எண்ணங்களும் எப்பொழுதும் எதிர்மறையில் இருக்கும். பிரச்னைகளை வளர்க்கும். ஆனாலும், சிலருக்கு இப்படி அமைந்துவிடும். அவர்கள் இந்த பலவீனங்களைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்கள் லக்னத்தின் வலிமையை பயிற்சியாலும், பரிகாரத்தாலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள், எப்பொழுதும் தம்பதிகளாக இருக்கக் கூடிய முருகப் பெருமானையோ, அல்லது பெருமாளையோ தங்கள் வழிபடு தெய்வமாகக் கொண்டு பூஜை செய்து வர வேண்டும்.

ஹோரை ஜாதகத்தின் பெருமை

சிலருக்கு ஜாதகம் இருக்கும். சிலருக்கு ஜாதகம் இருக்காது. ஜாதகம் இல்லாதவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, அதைத் தீர்க்கும் வழிகளையும், அந்த குறிப்பிட்ட பிரச்னை தீருமா தீராதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கும், ஹோரை ஜோதிடம் பயன்படுகிறது. பிரச்னை, எப்பொழுது ஜோதிடரிடம் சொல்லப்படுகிறதோ, அந்த நேரத்தை வைத்து ஒரு ஜாதக சக்கரத்தை போட்டு, அதில் கிரகங்களை அடைவுபடுத்தி, பலன்களைச் சொல்வார்கள்.

இது பெரும்பாலும் சரியான தீர்வைத் தரும். ஆனால், இதில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்ன என்று சொன்னால், ஒரே ஒரு பிரச்னைக்கு மட்டும்தான் இதில் பலன் பார்க்க முடியும். அதுவும் மிக விரைவாக எதிர்பார்க்கக் கூடிய பிரச்னைக்கு மட்டுமே தீர்வு காண முடியும். பொதுவான, எதிர்கால, முழுமையான பலன்களுக்கு பிறந்த ஜாதகம்தான் சரியான வழிகாட்டும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Venus ,Yogakkara ,Navagrahas ,Asuras ,
× RELATED சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?