×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். கடந்த ஜனவரி 17ம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக 18 காளையை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வழங்கப்பட்டது. 17 நாடுகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது. முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு 3 சுற்றுகள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. கமிட்டியிடம் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இறுதிச்சுற்றில் மாடுகள் பிடிக்கப்பட்டதை எண்ணினால் யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவரும்.

எனக்கு கார் தேவை இல்லை. என்னை முதல் இடம் என்று அறிவித்தாலே போதும். விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். வரும் 24ம் தேதி மதுரை வருகை தரும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளேன். ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும், அரசியல் ஆக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாடுபிடி வீரர் அபிசித்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Cowherd ,Abhi Siddar ,Alankanallur ,Jallikattu ,Madurai District Collector ,Madurai ,Alankanallur Jallikattu ,Sangeetha ,Alanganallur jallikattu ,Dinakaran ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை