×

அன்று கச்சேரியில் நிராகரிக்கப்பட்டார்… இன்று உலகமெங்கும் பயணிக்கிறார்!

நன்றி குங்குமம் தோழி

‘இவர் வாசிக்க வந்தால், நான் கடம் இசைக்க மாட்டேன்’என்று சொன்னவர்களின் முன்பு தனக்கென ஒரு அடையாளத்தையும், தன்னை போல இசையின் மேல் ஆர்வம் கொண்ட, பிறரால் நிராகரிக்கப்பட்ட பல பெண்களை கொண்டு ‘‘கட தரங்’’ மற்றும் ‘‘ஸ்திரீ தாள தரங்’’ எனும் இசைக் குழுவினை உருவாக்கியுள்ளார் இந்தியாவின் முதல் பெண் கடம் இசைக்கலைஞரான பெங்களூரை சேர்ந்த சுகன்யா ராம்கோபால். தன் 12 வயதில் இசைத் துறைக்கு வந்தவர், அதில் சந்தித்த இன்னல்கள் மற்றும் உயரங்களை பற்றி விவரித்தார்.

‘‘நானும் அக்காவும் சின்ன வயசில் முதலில் பாட்டுதான் கற்றுக் கொண்டோம். அப்போது வீட்டுக்கே வந்து கற்றுத் தருவாங்க. அதன் பிறகு விக்கு விநாயக்ராம் அவர்கள் தந்தை  ஹரிஹர ஷர்மா அவர்களின் இசைப் பள்ளியில் சேர்ந்து பாட்டோடு, வயலின் பயின்றோம். எனக்கு மற்ற இசைக் கருவிகளை விட மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் மேல் அதிக ஈடுபாடு இருந்தது. ஒரு நாள் மிருதங்கம் வகுப்பிற்கு சென்று எனக்கு அதைக் கற்றுக் கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்தேன்.  ஹரிஹர ஷர்மா அவர்கள் தான் எனக்கு மிருதங்க பயிற்சி அளித்தார்.

அதன் பிறகு விக்கு விநாயக்ராம் அவர்களுடன் சேர்ந்து கச்சேரியில் வாசிக்க ஆரம்பிச்சேன். ‘சவால் ஜவாப்‘ என்ற கச்சேரியில் அவர் கடம், மிருதங்கம் இரண்டையுமே சேர்ந்து வாசித்தார். அவர் வாசிப்பதைப் பார்த்து முடிவு செய்தேன், இனி கடம் தான் என்னுடைய வாத்தியம் என்று.

அந்த கச்சேரியில் அவர் கடம் வாசிச்சதை இப்போது நினைத்தாலும் எனக்கு அப்படியே மெய்சிலிர்த்திடும்’’ என்றவரின் கடம் வாசிக்கும் கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை.‘‘நான் விக்கு அவர்களிடம் என் விருப்பத்தை சொன்னதும். அவர் பெண்களால் கடம் வாசிக்க முடியாது. அது ரொம்பவும் கடினமான வாத்தியம் என்று சொல்லி நிராகரிச்சிட்டார். ஆனால் கடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசையை நான் விடவில்லை.

என்னுடைய அந்த ஆர்வத்தைப் பார்த்து விக்கு சார் அவர்களே எனக்கு அதற்கான பயிற்சி அளிக்க முன்வந்தார். அப்போது, இசைப் பள்ளியில் அனைவர் முன்பும், ‘கடத்திற்கு ஆண்பெண் என பேதம் கிடையாது. யார் வாசித்தாலும் அதில் இருந்து இசை வரும். நம்ம பள்ளியில் முதல் முறையாக ஒரு பெண் குழந்தை கடம் வாசிக்க போறாங்க. அது எனக்கு பெருமை தான்’ என்றவர் அன்று முதல் என்னை அவருடைய சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அவர் ஒரு வருடம் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் பேராசிரியரா போக வேண்டி இருந்ததால், அவரின் தந்தை ஹரிஹர சர்மா அவர்கள் எனக்கு பயிற்சி அளித்தார். ஒரு சரணத்தை இடைவிடாமல் வாசிக்க சொல்வார். கைகள் வலிக்கும், இருந்தாலும் பயிற்சியை நிறுத்தமாட்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்த நான் ஒரு வருடத்தில் கச்சேரி செய்யும் அளவிற்கு என்னை தயார் படுத்திக் கொண்டேன். ஹரிஹர சர்மா அவர்கள் மட்டுமில்லாமல், அவரின் சீடரான வைத்தியநாதன் மற்றும் விக்கு சாரின் சகோதரர் சுபாஷ் அவர்களும் எனக்கு பயிற்சி அளிப்பார்கள்.

12 வயதில் மிருதங்கம் பயில வந்த நான் என்னுடைய 17 வயசில் இருந்து கடம் வாசிக்க பழக ஆரம்பித்தேன். நான் கடம் வாசிக்க போகிறேன்னு வீட்டில் சொன்ன போது, அப்பாவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் நான் வாசிப்பதையும் எனக்கு அதன் மேல் இருக்கும் ஆர்வத்தையும் புரிந்துகொண்டவர் என்னுடைய எந்த கச்சேரியையும் மிஸ் செய்ய மாட்டார். இந்த 50 வருடங்களில் 500க்கும் மேற்பட்ட கச்சேரிகள் பண்ணியிருக்கேன்.

ஆனால் நான் பயில ஆரம்பித்து 35 வருடங்கள் கழித்துதான் ஒரு பெண் கடம் கற்றுக் கொள்ள என்னை அணுகினார். இதுவும் ஒரு வாத்தியம். இதனை ஏன் பெண்கள் அதிகம் விரும்புவதில்லை என்ற காரணத்தை கேட்ட போது, சில குடும்ப பின்னணியில் பெண்கள் கடம் வாசிக்க அனுமதிப்பதில்ைல. மேலும் சில பெண்களுக்கு கடத்தை தங்களால் கையாள முடியாது என்றும், பெண்கள் இந்த குறிப்பிட்ட வாத்தியங்களை தான் பயில வேண்டும் என அந்த காலத்தில் விதிக்கப்பட்டு இருக்கலாம்’’ என்றவர் ‘கட தரங்’ மற்றும் ‘ஸ்திரீ தாள தரங்’ உருவான கதை பற்றி விவரித்தார்.

‘‘பெங்களூரில் ஒரு கச்சேரிக்காக போயிருந்தோம். அங்கு எங்களுடன் வாசிக்க வந்தவர்களுள் ஒருவர், நான் வாசித்தால் அவர் வாசிக்க மாட்டேனு சொல்லிட்டார். அவர் அப்படி சொன்ன ஒரே காரணத்தால், என்னை அந்த கச்சேரியில் வாசிக்க அனுமதிக்கவில்லை. மனதால் நான் ரொம்ப கஷ்டப்பட்டது அப்போதுதான். அந்த சமயத்தில் உருவானது தான் ‘கட தரங்’. ஒரு கட கலைஞர், ஒரே நேரத்தில் ஐந்து முதல் ஆறு கடங்களை வைத்து இசையமைப்பார்கள்.

அதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டேன். வெற்றியும் பெற்றேன். கட தரங் நிகழ்ச்சியின் போது மட்டும் நான் சொந்தமாக இசைஅமைத்த இசையினை வாசிப்பேன். இசையில் ஆர்வம் இருக்கும் பெண்கள், ஆனால் அவர்கள் அதனை பயிலக்கூடாது என்று நிராகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் ‘ஸ்திரீ தாள தரங்’. இந்த அமைப்பு நிறுவி 30 வருடங்களாகிறது. இதில் என்னையும் சேர்த்து 5 பேர் இருக்கிறோம்.

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாத்தியங்களை வாசிப்போம். எங்களின் முதல் கச்சேரி இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலில் (ICCR) நிகழ்ந்தது’’ என்றவர் மறக்கமுடியாத சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘ஒரு முறை சென்னையில் ஸ்திரீ தாள தரங் கச்சேரிக்காக நாங்க அனைவரும் சென்னைக்கு வந்தோம். அன்று மாலை கச்சேரி. காலை ரயில் நிலையத்தில் இருந்து நாங்க தங்குமிடத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறிய போது, அதன் ஓட்டுனர் ஒரு கடத்தை உடைச்சுட்டார். முக்கியமான ஸ்ருதிக்கு தேவைப்படும் கடம் அது.

மாலைக்குள் புதிய கடம் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. என்ன செய்வதுன்னு தெரியல. உடனே சினிமாத் துறையில் கடம் வித்வானான கடம் கார்த்திக்கிடம் சூழ்நிலையை சமாளிக்க அவரின் கடத்தினை வாங்க வேண்டியதானது. சரி பிரச்னை தீர்ந்தது என்று நினைத்தால், ஆறு கடத்திற்கான மைக் செட்டினை என் மாணவி ஆட்டோவிலேயே விட்டுவிட்டாள். அதை நாங்க மாலையில் கவனிச்சோம். கச்சேரி ஆரம்பிக்க நேரம் குறைவாக இருக்கும் போது இப்படி சிக்கல். எப்படி சமாளிப்பதுன்னு யோசித்துக் கொண்டிருக்கும் போது, காலையில் நான் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுனர், அந்த மைக் அடங்கிய பையினை கொண்டு வந்த கொடுத்தார். அவர் இல்லை என்றால் கச்சேரி நிறைவாக நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி உற்சவம் போது எங்க குழுவினரோடு நான் கண்டிப்பாக கச்சேரியில் கலந்து கொள்வேன். அதைத் தவிர பல நாடுகளிலும் நாங்க கச்சேரி செய்திருக்கிறோம். இங்கு கர்நாடக இசைக்கு எவ்வளவு மதிப்பு நாம் கொடுக்கிறோமோ அதற்கு ஒரு படி மேல் வெளிநாட்டில் உள்ளவர்கள் இசையின் மேல் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கச்சேரியில், திரைஉலகினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்’’ என்றவர் கடத்தின் அமைப்பு மற்றும் அதன் வகைப் பற்றி விவரித்தார்.

‘‘பெங்களூர், சென்னை, மானாமதுரை என மூன்று இடங்களில் கடங்கள் மிகவும் பிரசித்தி. பெங்களூர் மற்றும் சென்னையில் தற்போது கடம் உற்பத்தி செய்வதில்லை. மானாமதுரையில் மட்டும் தான் அதனை தயாரிக்கிறார்கள். நான் கடம் வாசிக்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை மானாமதுரை கடத்தினை தான் பயன்படுத்தி வருகிறேன். பொதுவாக மண்ணால் செய்யக்கூடிய பாண்டங்களின் எடை அதிகமாக இருக்கும்.

ஆனால் சாதாரண பானைகளை விட கடத்தின் எடை ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். அது சாதாரண குடம் போல் இல்லாமல் அதன் அமைப்பு வித்தியாசமாக இருக்கும். கடம் செய்யும் போது அதில் பஞ்சலோகங்களை கலப்பார்கள். மேலும் அது மிகவும் வழுவழுப்பாகவும், மெருகேற்றப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கடமும் ஒரு சரணத்தை வெளிப்படுத்தும். பெங்களூரில் என் வீட்டில் 100க்கும் மேற்பட்ட கடம் வைத்திருக்கிறேன்.

என்னுடைய குருவான விக்கு விநாயக்ராம் அவர்களுக்கு மரியாதை அளிக்க விரும்பி, Sunaadam The Vikku Bani of Ghatam Playing எனும் புத்தகத்தை எழுதி இருக்கேன். இதில் என் குரு விக்கு விநாயக்ராம் அவர்களின் கடம் வாசிக்கும் முறைகள், விரல் உபயோகிப்பு என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன்’’ என்றவர் பெஸ்ட் ஆர்டிஸ்ட் விருது, ஆர்டிஸ்ட் ஆப் தி இயர் மற்றும் பெஸ்ட் சீனியர் கடம் ஆர்டிஸ்ட் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post அன்று கச்சேரியில் நிராகரிக்கப்பட்டார்… இன்று உலகமெங்கும் பயணிக்கிறார்! appeared first on Dinakaran.

Tags : Kungumum Dothi ,Kada Tarang ,Stree ,
× RELATED சட்டங்கள் அறிவாய் பெண்ணே!