×

உணவுத் தயாரிப்பில் 1000+ தொழிலதிபர்களை உருவாக்கியவர்!

நன்றி குங்குமம் தோழி

நம்மில் அனைவருக்கும் சுவையான உணவினை சாப்பிட பிடிக்கும். நா ருசிக்காக நாம் சாப்பிடும் வித விதமான உணவுகளால் உடலுக்குக் கேடு ஏற்படும் என்கிறார்கள். நல்ல நல்ல உணவினை வீட்டில் சுவையாக சமைத்து சாப்பிட்டால் எந்தவித கெடுதலும் ஏற்படாது என்று கூறுகிறார் கரூரைச் சேர்ந்த நிர்மலா பாலு. இவர் உணவுத் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு கடந்த 25 வருடமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை 5000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உணவுத் தயாரிப்பு குறித்த பயிற்சியினை அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பெண்களில் பலர் பெண்கள் தொழில்முனைவோர்களாக பல சாதனைகளை செய்துள்ளனர். தன்னால் பல பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்ததை பெருமையாக உணரும் நிர்மலா தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘திருமணமான சில ஆண்டுகளிலேயே நான் என் கணவரை இழந்தேன். அவர் என்னைவிட்டு பிரிந்த போது எனக்கு 27 வயது. இரண்டு குழந்தைகளுடன் நான் நிர்கதியாக நின்றேன். என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்கு உதவி செய்யவும் யாருமில்லை. என் கணவரும் பெரிய அளவில் எங்களுக்காக ெசாத்து எல்லாம் சேர்த்து வைக்கவில்லை. அவரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நகர்ந்தது என்பதால், வரும் சம்பளம் குடும்பம் நகர்த்தவே சரியாக இருந்தது.

இதற்கிடையில் அவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட, இருந்த சேமிப்பும் அவரின் மருத்துவ செலவிற்கு சரியானது. ஆனால் என்ன முயன்றும், அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. காரணம், அவருக்கு தகுந்த நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அதனால் நோயின் பாதிப்பு அதிகமானதால், அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதால், என்னால் முடிந்த வரை நான் ரத்த தானம் செய்து வருகிறேன். இது வரை 84 தடவை ரத்தம் தானமாக கொடுத்திருக்கிறேன். அதற்காக எனக்கு ‘குருதி கொடையாளி’ன்னு பட்டமும் கொடுத்திருக்காங்க.

என் கணவரை இழந்து வாழவே வழியின்றி என்ன செய்றதுன்னு தெரியாம தான் இருந்தேன். என் சொந்தக்காரங்களும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் தான் பெண்கள் சுய உதவிக் குழுவில் சேரலாம்ன்னு முயற்சித்தேன். ஆனால் அதிலும் என்னை ஒரு குழு உறுப்பினரா சேர்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதற்கு முக்கிய காரணம் எனக்கு வருமானம் இல்லை என்பது. நான் குழுவில் சேர்ந்து கடன் பெற்று அதன் மூலம் ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்ற நோக்கத்தில் தான் அணுகினேன்.

அதற்கும் வழியில்லாமல் போனது. வேலை தேடி அலைஞ்சேன். ஒரு வேலையும் கிடைக்கல. என்னுடன் சேர்ந்து என் குழந்தைகளும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. என் கஷ்டத்தைப் பார்த்து கடவுள் கண் திறந்தார் என்று தான் சொல்லணும். தொண்டு நிறுவனம் ஒன்றில் களப் பணி செய்யும் வேலை கிடைச்சது. குறைந்த சம்பளம் என்றாலும், அந்த வேலையில் வரும் சம்பாத்தியத்தில் என் குழந்தைகளின் பசியினை போக்க முடிந்தது. நான் என்னுடைய கடும் உழைப்பை கொடுத்தேன். என்னை அரசு மகளிர் திட்ட அலுவலகத்திற்கு பயிற்சிக்காக அனுப்பினாங்க.

அங்கே சொல்லிக் கொடுக்கும் பயிற்சியினை கற்றுக் கொண்டு வருவது தான் என் வேலை. அங்கு நான் எடுத்துக் கொண்ட பயிற்சி ஏராளமானது. எல்லா பயிற்சியிலும் கலந்து கொண்டேன். என் ஆர்வத்தைப் பார்த்து அந்த நிறுவனம் எனக்கு ஒவ்வொரு பயிற்சியையும் அளிக்க முன் வந்தார்கள். அதில் பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து பொருட்களில் உணவுகள், பிரியாணி, கிச்சடி, பரோட்டா, பீசா, பர்கர், நூடுல்ஸ், துரித உணவுகள், இனிப்பு, கார பலகாரங்கள், நொறுக்கு தீனிகள், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம், பளூடா என்று 100க்கும் மேற்பட்ட உணவுகள் குறித்த பயிற்சிகள் கொடுத்தாங்க.

இது மட்டுமில்லாமல், கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிகளும் இருந்தது. அகர்பத்தி, மெழுகு வர்த்தி, இயற்கை வாசனைப் பொருட்கள் தயாரிப்பது, ஃபேஷன் டிஸைன், அழகு கலை, ஜர்தோசி வேலைப்பாடு, பொம்மை செய்தல், அலங்காரப் பொருட்கள், நகை வடிவமைப்பு என அனைத்து பயிற்சிகளையும் சளைக்காமல் கற்றுக் கொண்டேன். முழுமையாக பயிற்சி எடுத்த பின் நான் வேலை பார்த்த என் தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பும் பயிற்சியினை சொல்லிக் கொடுத்தேன்’’ என்றவர் இந்த பயிற்சிகளை தனியாக சொல்லிக் கொடுக்க துவங்கினார்.

‘‘நான் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அவர்கள் எனக்கு பல பயிற்சிக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அந்த பயிற்சி எடுத்த போது தான் என்னைப் போல் பல அபலைப் பெண்கள் இந்த சமூகத்தில் உள்ளனர். அவர்களுக்கு கைத் தொழில் ஒன்று கையில் இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கான வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள உதவும். இதன் அடிப்படையில் நான் மற்ற தொண்டு நிறுவனங்களை அணுகினேன்.

அங்குள்ள சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டேன். அவர்களும் வாய்ப்பு அளிக்க குழுப் பெண்களுக்கு பயிற்சியினை அளிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் என்னுடைய பயிற்சி அளிக்கும் பணி துவங்கியது. இன்று பலதரப்பட்ட சுயஉதவிக் குழுப்பெண்களுக்கு நான் உணவுத் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். உணவு நம்முடைய ஆரோக்கியத்தின் கேடயம் என்று சொல்லலாம். இப்போது மார்க்கெட்டில் பல விதமான உணவுகள் விற்பனையில் உள்ளன.

அவை சாப்பிட சுவையாக இருந்தாலும், உடம்பிற்கு கேடு விளைவிக்க கூடியது. இதே உணவினை நாம் வீட்டில் தயாரித்து சாப்பிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் நம்மை அண்டாது. மாத்திரை, மருந்துக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குழுவினரும் தங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை நாடி வருகிறார்கள். எந்த குழுவால் நான் நிராகரிக்கப்பட்டேனோ… இன்று பல குழு பெண்களின் பயிற்சியாளராக வலம் வருகிறேன்.

இதன் மூலம் என் வாழ்க்கை மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையையும் என்னால் முடிந்த அளவு முன்னேற்றி இருக்கிறேன்’’ என்றவர் குழு பெண்கள் மட்டுமில்லாமல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொழில் பயிற்சி அளிக்கும் பொருட்டு உணவுத் தயாரிப்பு முதல் அதனை சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல் என பல பயிற்சிகளை அளித்து வருகிறார்.

‘‘என்னுடைய பயிற்சி முழுக்க முழுக்க உணவுத் தயாரிப்பு குறித்து என்பதால், அதில் செய்முறைப் பயிற்சி தான் பெரும்பாலும் இருக்கும். இதன் மூலம் ஒரு உணவினை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் அரசு வங்கியான நபார்டு மூலம் விவசாயிகளை அணுகி அவர்களுக்கு விவசாயப் பொருட்களில் மதிப்பூட்டும் பொருட்களை தயாரித்து அதன் மூலம் வருமானத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பது குறித்தும் பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.

தொழில் முனைவோர்கள் மட்டுமில்லாமல், என்னைப் போல் பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருகிறேன். இவர்கள் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் பலமான பெண் சமூதாயத்தை உருவாக்க வேண்டும்’’ என்று கூறும் நிர்மலா அன்னப்பூரணி, விவேகி, வேலுநாச்சியார், அறுசுவை போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: கு.பன்னீர்செல்வம்

The post உணவுத் தயாரிப்பில் 1000+ தொழிலதிபர்களை உருவாக்கியவர்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்