×

கோடீஸ்வர யோகம் தரும் தை வெள்ளி விரதம்; அம்பிகையை வழிபட்டால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்..!!

தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். செல்வத்தை அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை நாளில், உத்தராயண காலமாகிய தைமாதத்தில் தவறாமல் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தை மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு.

இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம். நோய் பரவல் காலமாக இருப்பதால் கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளது எனவே வீட்டிலேயே பாயசம் செய்து அம்மன் படத்திற்கு முன்பு நைவேத்தியம் செய்து வழிபடலாம். தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். லட்சுமியை நாம் வழிபட்டால் நமது லட்சியக் கனவுகள் நனவாகும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.

லட்சுமி கடைக்கண் பார்க்க தைமாத வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது. ஒவ்வொரு பெண்களும் நாம் சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். கணவனுக்கு ஆயுள் நீடிக்க வேண்டும் என்று விரும்பி அம்மனை வணங்குவார்கள். மகாலட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறும். அதிகாலை நேரத்தில் அபிராமி அந்தாதி படிப்பதும் கேட்பதும் நல்லது. பெருமாள் கோவில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத சூழ்நிலை இருப்பதால் அருகில் உள்ள புற்றுள்ள கோயிலுக்குச் சென்று புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொண்டால் காலசர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் அருள் இருக்கும். எனவேதான் மகாலட்சுமிக்கு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார் மகா விஷ்ணு. மகாலட்சுமி யோகம் உங்க ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்தாலும் உங்கள் இல்லத்திலும் செல்ல வளம் பெருகும்.

ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள். தை வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மனை வணங்கினால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்.

நவ கிரகங்களில் சுக்கிர பகவான் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் முறை வருகிறது. பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சகோதரன் சகோதரி முறை வருகிறது. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வீட்டில் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.

The post கோடீஸ்வர யோகம் தரும் தை வெள்ளி விரதம்; அம்பிகையை வழிபட்டால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்..!! appeared first on Dinakaran.

Tags : Lakshmi ,Thai Fridays ,Sukra ,Friday ,
× RELATED புதுக்கோட்டையில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம்