டெல்லி : நாடு முழுவதும் 14 முதல் 18 வயதுடைய கிராமப்புற மாணவர்களில் 25% பேருக்கு 2ம் வகுப்பு பாடங்களை தங்களது மாநில மொழிகளில் சரளமாக படிக்க இயலவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதம் பவுண்டேஷன் என்ற அமைப்பு ஆண்டுதோறும் மாணவர்களின் கல்வி சேர்க்கை, அவர்களது திறன் குறித்து ஆய்வு நடத்தி ஆண்டு கல்வி அறிக்கை நிலையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் அந்த அமைப்பு நாடு முழுவதும் 26 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின் போது, மாணவர்களிடம் வாசிக்கும் திறன், ஆங்கிலத்தில் படிக்கும் திறன், அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் அடிப்படை கணக்குகளை கணக்கிடும் திறன், எழுத்தில் இருப்பதை படித்து புரிந்து கொள்ளும் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது.
அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், 14 – 18 வயது கிராமப்புற மாணவர்களில் 86.8% பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று இருப்பதும் அதில் 26% பேருக்கு 2ம் வகுப்பு பாடங்களைத் தங்கள் மொழிகளில் படிக்கத் தெரியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 3,4ம் வகுப்புகளில் கற்றுத் தேற வேண்டிய பாடங்களில் தடுமாற்றம் அடைந்து வருகின்றன. அதே போல 43% பேருக்கு ஆங்கிலத்தில் வாக்கியத்தைப் படிக்க முடியவில்லை. ஆங்கில வாக்கியங்களைப் படிக்கும் மாணவர்களில் 75% பேருக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஆங்கிலத்தில் படிக்கும் திறன் சற்று அதிகரித்து இருப்பதும் அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் 14 முதல் 18 வயது மாணவர்களில் 90% பேர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50% பேர் மட்டுமே அதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிந்து வைத்துள்ளனர். மாணவர்களில் 44%பேரும் மாணவிகளில் 20% பேரும் சொந்தமாக மொபைல் போன்களை வைத்து இருக்கின்றனர். அன்றாட வாழ்வுக்கான கணக்குகளை கணக்கிடுவதில் மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 14 முதல் 18 வயது மாணவர்களில் 90% பேர் சமூக வலைத்தளங்களில் ‘ஆக்டிவ் ‘ : ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.