×

நீட், ஜே.இ-இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஒன்றிய கல்வி அமைச்சகம்..!!

சென்னை: நீட், ஜே.இ-இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கக்கூடிய பயிற்சி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 11 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட், ஜே.இ-இ உள்ளிட்ட பல்வேறு வகையான நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கக்கூடிய பயிற்சி நிலையங்களால் மாணவர்கள் பல்வேறு மனஉளைச்சல்களுக்கு ஆளாகி பாதிக்கப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரக்கூடிய நிலையில் அதற்கு வலு சேர்க்கு விதமாக ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்த அறிக்கை அமைத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. பயிற்சி நிறுவனங்கள் பொறுத்தவரை 16 வயது நிரம்பிய மாணவர்கள் அல்லது 12 வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே பயிற்சி நிலையங்களில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. முன்கூட்டியே 6ஆம் வகுப்பு 7ஆம் வகுப்பு 9ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கச் கூடிய நிலை உள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதையும் ஒன்றிய கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முக்கிய இடமாக திகழ்கிறது. இந்த நகரத்தில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் மிக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது.

*16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை

*குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய தடை

*மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது.

*மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நடவடிக்கை

*விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

* விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. மேலும் அதிகரித்து காணப்படும் பயிற்சி நிறுவனங்களை சரி செய்யக்கூடிய நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

The post நீட், ஜே.இ-இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஒன்றிய கல்வி அமைச்சகம்..!! appeared first on Dinakaran.

Tags : Nead, J. ,EU Ministry of Education ,Chennai ,J. ,Union Ministry of Education ,Neat, J. ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...