×

கொடைக்கானலில் இணக்கமான தட்பவெப்பம்!: அரிய பறவையினங்கள் வருகை.. வனப்பகுதிகளில் ரீங்காரமிடும் பறவைகளின் கீச்சொலிகள்..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலையால் அரிய பறவையினங்கள் அதிகளவில் தென்பட தொடங்கியுள்ளதால் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி அரசு பதிவேட்டில் பதிவு செய்ய பறவை இன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த, உயர்ந்த, அடர்ந்த மரங்களை கொண்ட வனப்பகுதியாக திகழ்கிறது. இயற்கை எழிலார்ந்த வனப்பகுதிகளில் அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மட்டுமின்றி அரிய வகை வன விலங்குகளும், சிறகை விரிக்கும் பறவைகளும் அதிகளவில் உள்ளன.

குறிப்பாக மதிகெட்டான் சோலை, பேரிஜம் வனப்பகுதி, அடுக்கம் வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில், இயற்கையின் கொடைகளாக பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கொடைக்கானலில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலையால் பல்வேறு அரிய வகை பறவைகள் தென்பட தொடங்கியுள்ளன. கான்கிரீட் காடுகளாக நகரங்கள் மாறி போனதால், சின்னஞ்சிறு சிட்டு குருவிகளை காண்பதும் அரிதாகி போன காலகட்டத்தில் கொடைக்கானலில் சில்லிடும் வனசூழலில் இனப்பெருக்கத்திற்காக அரிய வகை பறவைகள் வருகை தர தொடங்கியுள்ளதாக பறவை இன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்போதும் இணையுடன் மட்டுமே வாழும் காமன் ஹில் மைனா, மஞ்சள் வண்ணம் கொண்ட எல்லோ பிரவுட், பச்சை நிற திரோட்டர் ஹாக்கிங் பேரட், கருமை நிற புல்புல், மலபார் அணில் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் தென்பட தொடங்கியிருப்பதாகவும், பறவைகளின் கீச்சொலியால் வனமே நிறைந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மலைகளின் இளவரசி பொதிந்து வைத்திருக்கும் வனப்பகுதிகளில் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து பறவை இனங்களை காக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் இணக்கமான தட்பவெப்பம்!: அரிய பறவையினங்கள் வருகை.. வனப்பகுதிகளில் ரீங்காரமிடும் பறவைகளின் கீச்சொலிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Godakanal ,Princess of the Mountains ,Kodiakanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்